புத்தகம் வெளியீடு தொடர்பாக மிகப்பெரிய பதிப்பகத்துடன் சுஷாந்த் பேச்சுவார்த்தையில் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி அவரது மும்பை பாந்த்ரா வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். பட வாய்ப்புகள் அவருக்கு மறுக்கப்பட்டதாக ஒருபுறமும், அவரது காதலி ரியா சக்ரவர்த்தி பிரிவினாலும்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்கின்ற பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சுஷாந்தின் தற்கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுஷாந்தின் குடும்பத்தினர், நண்பர்கள், பாலிவுட் திரையுலகைச் சேர்ந்தவர்கள் சிலரிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். சுஷாந்தின் காதலி ரியா சக்ரவர்த்தி பாலிவுட்டின் பிரபல இயக்குநரும் நடிகை ஆலியா பாட்டின் தந்தையுமான 71 வயதாகும் மகேஷ் பாட் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. இதனால் அவரிடமும் நேற்று போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஹல்ஃப் நியூஸ் பக்கம் சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 3 மாதத்தில் சுஷாந்த் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட செல்போன் எண்களை மாற்றியதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், புத்தகம் வெளியீடு தொடர்பாக மிகப்பெரிய பதிப்பகத்துடன் சுஷாந்த் பேச்சுவார்த்தையில் இருந்ததாகவும், பதிப்பகத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மும்பையில் 3 முறை சுஷாந்தை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அவர் எது தொடர்பான புத்தகத்தை வெளியிட விரும்பினார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது