காப்பான் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் நாயகன், வில்லன் என இரண்டு பரிமாணங்களையும் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் என இயக்குநர் கே.வி.ஆனந்த் தெரிவித்திருக்கிறார்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் ‘காப்பான்’. இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் முன்னணி மலையாள நடிகரான மோகன்லால் முதன்முறையாக சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளார். ‘காப்பான்’ திரைப்படத்தில் சூர்யா, மோகன் லால் ஆகியோருடன் இணைந்து சாயிஷா, ஆர்யா, சமுத்திரக்கனி, மயில்சாமி உள்ளிடவர்களும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் சூர்யா சிறப்பு பாதுகாப்புப் படை அதிகாரியாக நடிக்கிறார். மோகன்லால் பிரதமர் வேடத்தில் நடிக்கிறார். காப்பான் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் விளம்பரப் பணிகளை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் காப்பான் திரைப்படத்தில் சூர்யா உள்ளிட்ட அனைத்து பிரதான கதாபாத்திரங்களும் இரண்டு பரிமாணங்களை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக படத்தின் இயக்குநர் கே.வி. ஆனந்த் தெரிவித்திருக்கிறார்.