சினிமா

’ஆன்லைன் உடற்பயிற்சியில் சூர்யா’- பர்சனல் ட்ரைனர் பகிர்ந்த சூர்யாவின் வைரல் புகைப்படம்!

sharpana

வீடியோ கால் மூலம் உடற்பயிற்சி செய்யும் சூர்யாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. இதனை, சூர்யாவின் பர்சனல் ட்ரைனர் நிர்மல் நாயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழில் முதன்முறையாக சிக்ஸ் பேக் வைத்த பெருமை நடிகர் சூர்யாவையேச் சேரும். கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் சிக்ஸ் பேக் வைத்து ஆச்சர்யப்பட வைத்தார். அவரைத்தொடர்ந்துதான், நடிகர் விஷால், சிம்பு, சூரி என பல நடிகர்கள் சிக்ஸ் பேக் வைத்தனர். கொரோனா சூழலில் பலரும் ஜிம் சென்று பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலையில் ஆன்லைன் வகுப்பு மூலம் சூர்யா பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆன்லைன் மூலம் சூர்யா பயிற்சி பெறும் புகைப்படத்தை அவரது பர்சனல் ட்ரைனர் நிர்மல் நாயர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்,

”இது நம் அனைவருக்கும் ஒரு கடினமான காலக்கட்டம். ஆனால், இதுபோன்ற சூழலில் கூட வெற்றிக்கான ஆர்வம்தான் நம்மை தொடர்ந்து கொண்டிருக்கிறது. நான் சூர்யா சாரை நேரில் சந்திக்கவில்லை. ஆனால், கொரோனா காலக்கட்டத்தில் இணைந்திருப்பதை உறுதி செய்துள்ளோம். ஆரோக்கியமாக இருக்க எங்கள் இலக்கை நோக்கி அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்.

சூர்யா சார் ஆன்லைன் மூலம் பயிற்சி செய்வது எனக்கு விருப்பமாக இல்லை. ஆனால், சூழ்நிலைகள் அவ்வாறு செய்ய வைத்துவிட்டன. இந்தக் காலக்கட்டத்தில் சூர்யா சார் உடற்பயிற்சிகளில் முழு கவனமுடன் ஒழுங்காக இருக்கிறார். அவர் எனக்கு மட்டுமல்ல பலருக்கும் முன்மாதிரியாக இருக்கிறார். அவருடன் தினமும் பயிற்சிகள் கொடுப்பதை பாக்கியமாக கருதுகிறேன்” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியோடு சூர்யாவுடன் வீடியோ காலில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் சூர்யா ரசிகர்கள் பகிர்ந்து வைரல் ஆக்கி வருகிறார்கள்.