தமிழ் திரையுலகில் விஜய், அஜித் இடைவெளிக்குப் பிறகு, கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் வெற்றியால் மீண்டும் முன்னணிக்கு வந்த சூர்யா, 47வது படமாக ‘SCENE’யை அறிவித்துள்ளார். சித்து மாதவன் இயக்கும் இந்த படத்தில் நஸ்ரியா, லால் இணைந்து நடித்துள்ளனர். டீசரில் போலீஸ் வேடத்தில் நெகட்டிவ் கேரக்டராக வரும் சூர்யாவின் வசனங்கள் அஜித் மங்காத்தா பாணியை ஒத்ததாக பேசப்படுகிறது.
ஒருபக்கம் நடிகர் விஜய் அரசியலில் எண்ட்ரி கொடுத்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் சேவைக்கு சென்றுவிட்டார். மறுபக்கமோ கார் பந்தயம் என தன்னுடைய கனவு வாழ்க்கையை நோக்கி நடிகர் அஜித்குமார் சென்றுவிட்டார். இப்படி தமிழ் திரையுலகின் இரண்டு ட்ரெண்ட் செட்டிங் ஹீரோக்கள் இருவரும் சினிமாவை விட்டு விலகியிருக்கும் சூழலில், அடுத்து யார் அவர்கள் இடத்தை நிரப்பி தமிழ் சினிமாவை நிலைநிறுத்தப்போகிறார்கள் என்ற கேள்வி பெரிதாகவே எழுந்தது.
ஒரு நேரத்தில் விஜய், அஜித் இருவருக்கும் போட்டியாக நடிகர் சூர்யா முன்வரிசையில் இருந்தவர் என்றாலும், வரிசையாக ஃபிளாப் படங்களாக கொடுத்து இவரால் இனி கம்பேக் கொடுக்கமுடியுமா என்ற இடத்தில் தான் இருந்துவந்தார்.
இந்தசூழலில் தான் தற்போது கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் என்ற 2 படங்களை அடுத்தடுத்து ஹிட்டாக கொடுத்தது மட்டுமில்லாமல், கருப்பு படத்தின் வசூல் 300+ கோடி மற்றும் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் வசூல் 200+ என பாக்ஸ் ஆஃபிஸிலும் ஹிட் கொடுத்து தரமான கம்பேக்கை கொடுத்துள்ளார் சூர்யா.
இந்நிலையில் தான் சூர்யா நடிக்கும் 47வது படத்தின் பெயர் ‘சீன் (SCENE) என அறிவிக்கப்பட்டுள்ளது. ரோமஞ்சம், ஆவேசம் படங்களை இயக்கிய சித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 47வது திரைப்படம்தான் ‘SCENE'. சூர்யா உடன் நஸ்ரியா, லால் மற்றும் லுங்கிபாய்ஸ் ராஜ்பிரியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சுசின் ஷ்யாம் இசையமைத்திருக்கும் இப்படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளனர். இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப்படத்தின் டைட்டில் சீசர் இன்று வெளியான நிலையில், படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் சூர்யா நெகட்டிவ் கேரக்டர் கொண்ட கதாபாத்திரமாக நடித்துள்ளார் என்பது தெரிகிறது. டீசரில் இடம்பெற்ற ‘டேலண்ட் டேலண்ட்னு உருட்டி உருட்டி அந்தாளோட கேவலமான கேரக்டர் எல்லாம் மறைச்சிருங்கடா’ வசனமும், காவலர் கதாபாத்திரமும் அஜித்தின் மங்காத்தா பாணியை போல இருக்கிறது. அப்படத்தில் இடம்பெற்ற ‘எவ்வளவு நாளா தான் நல்லவனாவே நடிக்கிறது’ போன்ற வசனத்தை, சூர்யாவின் இந்தப்பட வசனமும் பிரதிபலிக்கிறது. சைக்கோ என்ற பின்னணி இசையுடன் வரும் குரலும் அவரை நெகட்டிவ் கேரக்டர் போலவே உணர்த்துகின்றன. கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் படத்திற்கு பிறகு ஹாட்ரிக் ஹிட் கொடுப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.