‘யானை’ படத்தின் மூலம் நடிகர் சூர்யாவும் இயக்குநர் ஹரியும் 6 வது முறையாக இணைய உள்ளனர்.
நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இப்படத்தை‘நானும் ரவுடிதான்’ பட இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மேலும் நந்தா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
நடிகர் சூர்யா, செல்வராகவன், கே.வி.ஆனந்த், சுதா கொங்கரா, ஹரி, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பல இயக்குநர்களின் இயக்கத்தில் படம் நடித்துள்ளார்.
தற்போது சூர்யா இரண்டு பெரிய படங்களில் நடித்து வருகிறார். செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே’ படத்திலும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ படத்திலும் நடித்து வருகிறார்.
என்.ஜி.கே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு சூர்யாவை பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
இந்நிலையில், கே.வி ஆனந்தின்‘காப்பான்’ திரைப்படம் முடிவடைந்ததும் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியது. அதன்படி தற்போது ‘யானை’ என்ற படத்தின் மூலம் இயக்குநர் ஹரியுடன் நடிகர் சூர்யா மீண்டும் இணையவுள்ளார். இப்படத்தை ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
‘பேரழகன்’,‘அயன்’ படங்களுக்கு பிறகு நடிகர் சூர்யாவுடன் மூன்றாவது முறையாக ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் இணைகிறது. மேலும் ‘ஆறு’,‘வேல்’,‘சிங்கம்’ஆகிய படங்களை தொடர்ந்து சூர்யாவும் ஹரியும் 6 முறையாக கூட்டணி சேருகின்றனர். இதனால் இப்படம் எப்போது முடிவடைந்து திரைக்கு வரும் என எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.