சினிமா

ஈட்டி எறிதல் வீரருக்கு முழங்கால் அறுவை சிகிச்சை: செலவை ஏற்ற நடிகர் சோனு சூட்!!

sharpana

 தேசிய ஈட்டி எறிதல் வீரருக்கு  முழங்கால் அறுவை சிகிச்சை செய்வதற்கான செலவுகளை ஏற்றுக்கொண்டுள்ளார் நடிகர் சோனு சூட். கொரோனாவால் கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் தடப்பட்டன. இந்நிலையில் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த செலவில் ஊருக்கு அனுப்பி வைக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டார், நடிகர் சோனுசூட்.

அதனையோட்டி உதவிக்கான கோரிக்கைகள் தொடர்ச்சியாக, அவரது ட்விட்டர் பக்கத்தில் வைக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஆந்திராவில் ஏழை விவசாயிக்கு டிராக்டர் வாங்கிக்கொடுத்தது, பெற்றோரை இழந்த மூன்று குழந்தைகளை தத்தெடுத்தது, ரஷ்யாவில் தவித்து வந்த மாணவர்களை சொந்த செலவில் விமானத்தில் இந்தியா அழைத்து வந்தது என்று அவரது சேவைகளின் பட்டியல் நீண்டுகொண்டேச் செல்கிறது.

இந்நிலையில் பிலால் யாதவ் என்பவர் “என் சகோதரர் சுதாமா குமார் தாய்லாந்தில் நடந்த ஆசியளவிலான தடகளப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று விளையாடினார்.அந்தப் போட்டியில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்ய உதவுங்கள்” என்று கோரிக்கை வைத்திருந்தார். இதனை ஏற்ற சோனுசூட் “உங்கள் சகோதரர் நாட்டின் பெருமை. அடுத்தவாரம் அறுவை சிகிச்சை செய்யப்படும்” என்று  பதிலளித்துள்ளார்.