சினிமா

ஆளில்லா திரையரங்குகள்.. களைகட்டும் ஓடிடி.. ஹிட் லிஸ்டில் இடம்பெறுமா தீபாவளி திரைப்படங்கள்?

webteam

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. புதிய படங்கள் வெளியிடப்படாததால் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளனர்.

அக்டோபர் 15-ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தாலும் தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இதனிடையே படத்தை எடுத்துவிட்டு வெளியிட முடியாமல் திண்டாடி வந்த தயாரிப்பாளர்கள் ஓடிடி தளத்தை தேர்வு செய்தனர். தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள் என பலருக்கு இத்திரைத்துறை வாழ்வாதாரமாக உள்ளதால் இந்த கடினமான சூழலில் பாதிப்பை சரிசெய்ய அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என தயாரிப்பாளர்கள் வேண்டுகோளும் விடுத்தனர்.

அதன்படி நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகிய ‘பொன்மகள் வந்தாள்', கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'பெண்குயின்' அனுஷ்கா நடிப்பில் வெளியான ‘நிசப்தம்’ உள்ளிட்ட சில படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டன. ஆனால் எதிர்ப்பார்த்தவாறு இந்த திரைப்படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில், விஷேச நாட்களான தீபாவளியை முன்னிட்டு முதன்முதலில் ஓடிடியில் திரைப்படங்கள் வெளியாக உள்ளது. தீபாவளி என்றாலே திரையரங்குகளும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் தியேட்டர் கொண்டாட்டங்களை மாற்றி ஓடிடி பக்கம் திருப்பிவிட்டுள்ளது. இதுவரை ஓடிடியில் வெளியான திரைப்படங்கள் பெரிய வரவேற்பை பெறாத நிலையில், எதிர்வரும் திரைப்படங்கள் மக்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என கேள்வி எழுந்துள்ளது.

நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ திரைப்படமும் தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பாக அமேசான் ப்ரைமில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் சூரரைப்போற்று திரைப்படத்தின் டிரைலரும் வெளியிடப்பட்டுள்ளது. டிரைலரே படு மெர்சலாக உள்ளதாக கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேபோல் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலரும் வெளியாகியுள்ளது. அதில் முழுக்க முழுக்க அரசியல் பேசும் அம்மனாக நயன்தாரா வலம் வருகிறார். எனவே அப்படமும் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

நடிகர் சூர்யாவை பொருத்தவரை நீண்ட இடைவெளிக்கு பின்னர் வெற்றிக்காக காத்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான சிங்கம் 3 திரைப்படம்தான் அவருக்கு வரவேற்பை கொடுத்தது. அதற்கு பின் வெளியான தானா சேர்ந்த கூட்டம், என்.ஜி.கே, காப்பான் போன்ற படங்கள் அவருக்கு வெற்றியை தேடித்தரவில்லை. அதனால் சூரரைப்போற்று படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என அப்போதே கூறப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பால் சூரரைப்போற்று தியேட்டரில் வெளியாக முடியாத சூழலில் ஓடிடியில் வெளியாகிறது.

இப்படங்கள் வெற்றி வரிசையில் சேருமா அல்லது வழக்கம்போல் மற்ற படங்களை போல் வரவேற்பை பெறாத படங்களின் வரிசையில் சேருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.