சினிமா

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: திலீப்புக்கு எதிரான விசாரணைக்கு தடை!

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: திலீப்புக்கு எதிரான விசாரணைக்கு தடை!

webteam

பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில், நடிகர் திலீப்புக்கு எதிரான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் நடித்து மலையாள நடிகை ஒருவர், காரில் கடத்தப்பட்டு பாலியில் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பல்சர் சுனில் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பிரபல மலையாள ஹீரோ, திலீப் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், இப்போது ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பான வழக்கு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நடக்கிறது. திலீப் உள்ளிட்ட இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருக்கும், குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் திலீப் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வழக்கின் முக்கிய ஆதாரமாக கருதப்படும் வீடியோ அடங்கிய, பென் டிரைவ் தனக்கு இன்னும் வழங்கப்படாததால் விசாரணையை தள்ளி வைக்கும்படி கூறப்பட்டிருந்தது. இம்மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து திலீப் தரப்பில், உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஏ.எம்.கன் வில்கர் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, திலீப் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ’’இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில், நடிகை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானபோது எடுத்துள்ள வீடியோ பிரதியை பெறுவதற்கு, மனுதாரருக்கு உரிமை உள்ளது. அதை வழங்க வேண்டும்’’ என்றார்.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் முடிவுக்கு வரும் வரை, திலீப் மீதான வழக்கை கேரள நீதிமன்றம் விசாரிக்க தடை விதிக்கப்பட்டது. வழக்கு விசாரணையை ஜூன் 3-வது வாரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.