மக்கள் நலனுக்காக இணைவோம் என நடிகர் ரஜினிகாந்தும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் கூறியதற்கு ஒரு தரப்பினர் ஆதரவும், எந்தப் பலனும் இருக்காது என மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து உள்ளனர்.
“பாலும் மோரும் இணைந்தால் தயிராகும். அதுவே முறிந்த பாலும் திரிந்த தயிரும் இணையும்போது தயிர் ஆகாது. இதுதான் ரஜினி, கமல் இணைப்பு” என கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சித்துள்ளார். நாகை மாவட்டம் மயிலாடுத்துறையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு தெரிவித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிடத் தயார் எனக் கூறினார். மேலும் ரஜினி மற்றும் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தது காலதாமதமானது என்றும், இருவரின் ரசிகர்களுக்கும் வயதாகிவிட்டதாகவும் அவர் விமர்சித்தார்.
பாஜக மத்திய முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழகத்தின் நலனுக்காக பாஜக உழைக்கிறது. ஆகவே தமிழகத்தின் நலனுக்காகவும், மாற்றத்திற்காகவும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்தை தாங்கள் சேர்த்துக்கொள்வோம் எனக் கூறியுள்ளார்.
அரசியலுக்கு வந்துவிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனும், அரசியலுக்கு வர இருக்கும் நடிகர் ரஜினிகாந்தும் இவ்வாறு கூறியிருப்பது தான் இன்றைய அரசியல் பரபரப்புக்கு காரணம். அரசியல் தொடர்பான அறிவிப்பு முதலே இருவருக்கும் பல தரப்பில் இருந்து எதிர்ப்பும், ஆதரவும் எழுந்து வருகிறது. மக்கள் நலனுக்காக இருவரும் இணைந்து பணியாற்றுவோம் என கூறியிருப்பதன் மூலம் வெற்றியை கைவசப்படுத்த வாய்ப்புள்ளதாக திரைப்பட இயக்குநரும், நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ சந்திரசேகர் கூறியுள்ளார்.
கூட்டணி எதுவாக இருந்தாலும் கமல்ஹாசன்தான் முதலமைச்சர் வேட்பாளர் என மக்கள் நீதி மய்யத்தின் உயர்மட்டக்குழு உறுப்பினரும், நடிகையுமான ஸ்ரீபிரியா கூறியுள்ளார். ரஜினியும், கமலுமே தமிழக அரசியலில் மாற்று என காந்திய மக்கள் இயக்கத் தலைவரும், ரஜினிகாந்தின் நண்பருமான தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
மாய பிம்பங்களான நடிகர்கள் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட கானல் நீர் போன்றவர்களை நம்பிச்சென்றால் எந்தப் பயனும் இருக்காது என அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார். பூஜ்யமும், பூஜ்யமும் சேர்ந்து ராஜ்ஜியம் அமைக்க முடியாது என ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பின், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்