சினிமா

ஆஸ்கரில் விருதை அள்ளிய ’தி ஷேப் ஆப் வாட்டரி’ன் கதை இதுதான்!

webteam

தொண்ணூறாவது ஆஸ்கர் விருது விழா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று காலை நடந்தது. இதில் 13 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்த ’தி ஷேப் ஆப் வாட்டர்’-க்கு, சிறந்த படம், சிறந்த இயக்குனர் (குல்லெர்மோ டெல் டோரா), சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு ( பால் டென்ஹாம்) சிறந்த இசை (அலெக்சாண்டர்) ஆகிய நான்கு விருதுகள் கிடைத்தன.

இந்தப் படத்தின் கதை இதுதான்.

அமெரிக்க, ஃபேன்டசி படம். அறுபதுகளில் நடக்கிறது கதை. சிறுவயதிலேயே பேச முடியாத இளம்பெண்ணுக்கு விண்வெளி ஆராய்ச்சி நிலையம் ஒன்றின் ரகசிய பரிசோதனைக் கூடத்தில் இரவு நேரப் பணி. நீரிலும் நிலத்திலும் வசிக்கும் மனிதனைப் போன்ற உயிரினம் ஒன்று ஆய்வுக்காகப் பரிசோதனைக் கூடத்துக்குக் கொண்டு வரப்படுகிறது. அதைப் பராமரிக்கும் பொறுப்பு அவளுக்கு. அந்த உயிரினம் அவள் வாழ்க்கையையே மாற்றுகிறது.  அதனுடன் பழகும் அவள், ஒரு கட்டத்தில் அதை நேசிக்கத் தொடங்குகிறாள். காதல் முற்றுகிறது. 

விண்வெளி ஆராய்ச்சிக்கான பரிசோதனை அதன் மீது தொடங்கப்படுகிறது. அந்த ஆபத்தில் இருந்து அதை விடுவிக்க கடுமையாக முயற்சிக்கிறாள் அந்தப் பெண். அதில் ஜெயித்தாளா, இல்லையா என்பதுதான் கதை. திரில்லர் பாணி கதையான இதில் சேலி ஹாகின்ஸ், மைக்கேல் ஷானன், ரிச்சர்ட் ஜென்கின்ஸ் உட்பட பலர் நடித்துள்ளனர்.