அமிதாப்பச்சன் - கமல்
அமிதாப்பச்சன் - கமல்  File Image
சினிமா

'இவ்வளவு அடக்கமாக இருப்பதை நிறுத்துங்கள் கமல்' - சட்டென்று ரிப்ளை கொடுத்த அமிதாப்பச்சன்!

JustinDurai

நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'கல்கி 2898 எடி' (Kalki 2898 AD). இதுநாள் வரையில் 'புராஜக்ட் கே' என்ற தற்காலிகப் பெயரில் அழைக்கப்பட்டு வந்த இப்படத்திற்கு 'கல்கி 2898 எடி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. அறிவியல் புகைக் கதை படமான இதை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. இந்திய சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்படும் படங்களில் ஒன்று இந்த படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Kalki 2898 AD

இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். இதையடுத்து அமெரிக்காவின் சான் டியாகோ நகரில் நடைபெற்று வரும் காமிக்–கான் சர்வதேச மாநாட்டில் ‘புராஜெக்ட் கே’ படம் குறித்த அப்டேட் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சிக்காக கமல்ஹாசன், பிரபாஸ் உட்பட படக்குழுவினர் அங்கு சென்று உள்ளனர்.

நிகழ்ச்சியில் அமிதாப்பச்சனைப் பற்றி பேசிய கமல்ஹாசன், அமிதாப்பச்சன் ஜி வாழும் காலத்தில் வாழ்வதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம் என கூறினார். இதற்கு வீடியோ காலில் பேசிய அமிதாப், "இவ்வளவு அடக்கமாக இருப்பதை நிறுத்துங்கள் கமல். எங்கள் அனைவரையும் விட நீங்கள் மிகவும் பெரியவர்" என்று நகைச்சுவையாக கூறினார்.

'கல்கி 2898 எடி' படம் 2898ஆம் ஆண்டில் பூமியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கவிருப்பதாகவும் அதற்காக அவருக்கு ரூ.25 கோடி சம்பளம் பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தை அடுத்த ஆண்டு (2024) தொடக்கத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.