ஜேஎஸ்கே ஃபிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் மற்றும் லியோ விஷன் ராஜ்குமார் தயாரித்திருக்கும் படம் 'அண்டாவ காணோம்'. ஸ்ரேயா ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை வேல்மதி இயக்கியிருக்கிறார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.
படம் பற்றி ஸ்ரேயா ரெட்டி கூறும்போது, ‘ஒன்பது வருடங்களுக்குப் பிறகு நான் மீண்டும் நடிக்க வந்திருக்கும் படம் இது. இயக்குனர் கதை சொன்னபோது எனக்கு புரியவே இல்லை. ’திமிரு’ அளவுக்கு இருக்குமா? எனக் கேட்டேன். ’திமிரு’ பத்தி பேசாதீங்க, இது உங்களோட மிகச்சிறந்த படமாக இருக்கும் என்று சொன்னார். ’நீங்க எதுவும் தயாராக வேண்டாம், நேராக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வாங்க என்று சொன்னார். மிகவும் பொறுமையாக, மதுரை வட்டார வழக்கை சொல்லி கொடுத்தார். இந்தப் படத்தில் ரசித்து நடித்தேன்’ என்றார்.
நடிகர் மனோபாலா கூறும்போது, ‘ஸ்ரேயா ரெட்டியை தமிழ் சினிமாவின் ஸ்மிதா படேல், ஷபனா ஆஸ்மி என சொல்லலாம். சிறப்பாக நடிக்கிறார்’ என்றார். விழாவில் இயக்குனர்கள் செல்வபாரதி, கிருஷ்ணா, பிரம்மா, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் உட்பட பலர் பேசினர்.