சினிமா

நடிகை ஸ்ரீ ரெட்டியின் அடுத்த அட்டாக்: கதாசிரியர் மீது பரபரப்பு புகார்!

நடிகை ஸ்ரீ ரெட்டியின் அடுத்த அட்டாக்: கதாசிரியர் மீது பரபரப்பு புகார்!

webteam

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, அடுத்ததாக தெலுங்கு திரையுலகின் முன்னணி ஸ்கிரிப்ட் டைரட்டர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். 

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக சமீபத்தில் குற்றம்சாட்டி இருந்தார் நடிகை ஸ்ரீரெட்டி. அந்தத் திரைப் பிரபலங்களின் பெயர் பட்டியலை ஸ்ரீ லீக்ஸ் என்ற பக்கத்தில் வெளியிடுவேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் தெலுங்கு திரையுலகம், அவர் நடிப்பதற்கான அங்கீகார அட்டையை ரத்து செய்துவிட்டது. இவருடன் பணியாற்ற மாட்டோம் என்று கூறிவிட்டது. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள நடிகர் சங்கத்துக்கு எதிரே நடிகை ஸ்ரீ ரெட்டி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினார். இதனால் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஸ்ரீ ரெட்டி தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யுமாறு கூறியிருப்பதாக பேஸ்புக்கில் பதிவிட்டார் ஸ்ரீரெட்டி.

இதற்கிடையே, நடிகர் ராணாவின் தம்பியும் தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகனுமான அபிராம் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டார் என்று கூறி நேற்று பரபரப்பைக் கிளப்பினார். இந்தச் சூடு மறைவதற்குள் அடுத்தப் பரபரப்பை கிளப்பியிருக்கிறார். 

இந்த முறை தெலுங்கு திரையுலகின் முன்னணி ஸ்கிரிப்ட் ரைட்டரும் இயக்குனருமான கோனா வெங்கட் மீது புகார் கூறியுள்ளார். கோனா வெங்கட், தமிழில் மாதவன், ஷமிதா ஷெட்டி, சதா நடிப்பில் ’நான் அவள் அது’ என்ற படத்தை இயக்குவதாக இருந்தது. சில காரணங்களால் அந்தப் படம் நின்றுவிட்டது.

ஸ்ரீரெட்டியின் இந்தப் புகார் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது பாலியல் புகாருக்கு ஆதாரமாக  கோனா, வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜ்களின் ஸ்கிரீன் ஷாட்டையும் அவர் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

கோனா வெங்கட் மறுப்பு 

ஸ்ரீரெட்டியின் புகார் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கோனா வெங்கட், ‘நான் உட்பட சில சினிமா பிரபலங்கள் மீது நடிகை ஒருவர் கூறும் அடிப்படை ஆதாரமற்ற புகார் குறித்து அதிர்ச்சி அடைந்தேன். நடிகையின் இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்தி யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொள்கிறேன். உண்மை கண்டிப்பாக வெல்லும். நடிகை மீது சட்ட நடவடிக்கையை தொடர்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.