தொலைபேசியில் தன்னை வராகி என்பவர் மிரட்டுவதாக காவல்துறையில் நடிகை ஸ்ரீரெட்டி புகார் அளித்துள்ளார்.
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் மனு கொடுத்துள்ளார். அதில், "தான் தெலுங்கிலும், தமிழிலும் நடித்து வருகிறேன். நான் சினிமா துறையில் பிசியாக இருக்கிறேன். சினிமா துறையில் நடிகைகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டினேன். அது தொடர்பாக கருத்து தெரிவித்தேன்.
இந்நிலையில் கடந்த 24-ம்தேதி சினிமா தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான வராகி என்னை ஊடகங்களில் தவறாக பேசி உள்ளார். எனது முகவரியை அறிந்த அவர் மிரட்டும் விதத்தில் பேசி உள்ளார். அவர் ஊடகங்களில் பேசும் என்னை விலைமாது என அவதூறாகப் பேசி உள்ளார். வராகி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவர் வீண் விளம்பரத்திற்காக எனக்கு எதிராக தவறான வார்த்தைகளை பேசி வருகிறார். அது எனக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எந்தவித ஆதாரமும் இல்லாமல் மிரட்டும் வராகி மீது காவல்துறை பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஸ்ரீரெட்டி, "சமூக வலைத்தளங்களில் மூலமாக சினிமா துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டு வருவது தொடர்பாக கருத்துக்கள் தெரிவித்தேன். தயாரிப்பாளர் வராகி என்னை தரக்குறைவாக விமர்சனம் செய்தார். விலைமாது என்றும் ஆபாசமாக பேசினார். அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்