800 ட்ரெய்லர், முரளிதரன்
800 ட்ரெய்லர், முரளிதரன் ட்விட்டர்
சினிமா

”என்னை தமிழனாக மட்டும் பார்க்கவில்லை” - முத்தையா முரளிதரனின் பயோபிக் ஆன ’800’ பட ட்ரெய்லர் வெளியீடு

Prakash J

இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக விளங்கியவர் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். இவர், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி மகத்தான சாதனை படைத்தார். முத்தையா முரளிதரன் 800 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் நினைவுகூரும் வகையில் ’800’ என்ற பெயரில் முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை வைத்து படம் ஒன்று உருவாகி உள்ளது. இப்படத்தில், ஆஸ்கர் விருது பெற்ற ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் சலீம் கதாபாத்திரத்தில் நடித்த மதுர் மிட்டல், முரளிதரனாக நடித்துள்ளார்.

சச்சின், ஜெயசூர்யா, முரளிதரன்

இவருடன் மஹிமா நம்பியார், நரேன், நாசர், வேலராமமூர்த்தி, ரித்விகா, அருள்தாஸ், ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கி இருக்கிறார். இந்த படம் தமிழில் எடுக்கப்பட்டு தெலுங்கு, இந்தி, ஆங்கிலத்தில் வெளியாக உள்ளது. இப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

இந்தநிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் இன்று, மும்பையில் வெளியானது. இந்த ட்ரெய்லரை ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் முன்னாள் இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யா ஆகியோர் வெளியிட்டனர். ட்ரெய்லர் படி முரளிதரனின் கிரிக்கெட் வாழ்க்கையை தாண்டி இலங்கையில் நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான தாக்குதல் சம்பங்களையும் உள்ளடக்கியதாகவும் இருக்கும் என்றே தெரிகிறது.

”குடியுரிமையே இல்லாத கொத்தடிமை கூட்டத்தில் இருந்து வந்தவர்களுக்கு குடிமகன் என்கிற அங்கீகாரம் கிடைப்பதே கஷ்டம். இன்று நாடே அண்ணார்ந்து பார்க்கும் அளவுக்கு தோட்ட காட்டான் வளர்ந்திருக்கிறான்” என்ற வசனத்துடன் தொடங்கும் ட்ரெய்லரில், முரளிதரனின் வீழ்ச்சியும் வளர்ச்சியும் கிரிக்கெட்டுடன் பின்னிப் பிணைந்துள்ளது. ஆங்காங்கே அவருக்கு ஏற்பட்ட துயர்களும் அவருடைய வலியை எடுத்துரைக்கின்றன.

ஒருகட்டத்தில், ’தமிழ் பேச தெரியுமா இல்லை, பேச விருப்பமில்லையா’ ரசிகர்கள் கேட்க தலைகுனிந்தபடியே செல்லும் அவர், இறுதியில் ’’நான் என்னைத் தமிழனாக மட்டும் பார்க்கவில்லை. நான் கிரிக்கெட்டர்" என்று முரளிதரன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார்.

ட்ரெய்லரின் படி பிரபாகரன் வேடத்தில் நரேன் நடித்துள்ளதாக தெரிகிறது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் தொடர்பான பல காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், படம் வெளியான பிறகு நிறைய விஷயங்கள் விவாதத்திற்கு உள்ளாகவும் வாய்ப்புள்ளது.