சினிமா

“என் அப்பாவை இழந்ததிலிருந்து மீள அவகாசம் கொடுங்கள்” - எஸ்பிபி சரண்

webteam

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “சிகிச்சையின்போதே மருத்துவ கட்டணத்திற்கான குறிப்பிட்ட தொகையை அவ்வப்போது செலுத்தி வந்தோம். இது தவிர இன்சூரன்சும் கவராகியிருந்தது. மருத்துவக் கட்டணத்தை செலுத்த முடியாமல், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் உதவியைக் கேட்டதாக பரவிய தகவல்கள் முற்றிலும் தவறானது. எஸ்பிபி உயிரிழந்த பின், நான் ஏதேனும் பணம் செலுத்த வேண்டுமா என மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டேன். அவர்கள் வேண்டாம் என்று கூறிவிட்டனர். மருத்துவமனை எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளது. இம்மருத்துவமனைக்கு ஏதேனும் ஒன்று என்றால் எங்கள் குடும்பம் மருத்துவமனையுடன் இருக்கும். எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

மருத்துவமனைக்கும், எங்கள் குடும்பத்திற்கும் நல்ல உறவும், புரிதலும் உள்ளது. சிகிச்சைக் கட்டணத்தைப் பற்றியே ஏன் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? 10 கோடி ரூபாயாக இருந்தால் கூட நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? நாங்கள் என் அப்பாவை இழந்திருக்கிறோம். கொஞ்சம் அதிலிருந்து மீள அவகாசம் கொடுங்கள். தொடர்ந்து எழும் புரளிகளை குறித்து எங்களை தொடர்பு கொண்டு தயவுசெய்து விசாரித்துக் கொண்டே இருக்காதீர்கள்” எனத் தெரிவித்தார்.