சினிமா

அன்புள்ள கில்லி படத்தில் நடிக்கும் லேப்ரடார் வகை நாய்.. டப்பிங் குரல் கொடுத்த நடிகர் சூரி!

அன்புள்ள கில்லி படத்தில் நடிக்கும் லேப்ரடார் வகை நாய்.. டப்பிங் குரல் கொடுத்த நடிகர் சூரி!

webteam

இதுவரை உருவாகியிருக்கும் மனிதன், நாய் நட்புறவு தொடர்பான கதைகளிலிருந்து மாறுபட்டு தனிச்சிறப்பான அம்சத்தை அன்புள்ள கில்லி படத்தில் பார்க்கலாம் என்கிறார் இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம். நாயின் மனக்குரலில் திரைக்கதை நகர்வது மாதிரி உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நாயின் குரலாக நகைச்சுவை நடிகர் சூரியின் குரல் இடம்பெறுகிறது.

இதுபற்றிப் பேசியுள்ள ஸ்ரீநாத் ராமலிங்கம், "நாயின் கதாபாத்திரத்திற்கு மக்களுக்கு நன்கு அறிமுகமான ஒருவரின் குரல் தேவையாக இருந்தது. ஏனெனில் அதுதான் முக்கியமான கதாபாத்திரமாக இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் சூரியுடன் நீண்ட நாள் பழக்கம் கொண்டவர். நாங்கள் டப்பிங் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது, அவர்தான் சூரியின் பெயரைப் பரிந்துரை செய்தார். பொதுவாக விலங்களுக்குக் குரல் கொடுக்க நடிகர்கள் தயங்குவார்கள். ஆனால் சூரி உடனே ஒப்புக்கொண்டார். படத்தின் காட்சிகளைப் பார்த்ததும் அவருக்குப் பிடித்துவிட்டது. லயன் கிங் போன்ற படங்களுக்கு நடிகர்கள் குரல் கொடுத்திருப்பதை நினைவுகூர்ந்த சூரி, மகிழ்ச்சியுடன் அந்தப் பணியை ஏற்றுக்கொண்டார்" என்று நெகிழ்கிறார்.

இப்போது டப்பிங்கை முடித்துவிட்டார் சூரி. "முந்தைய பணிகளில் பிஸியாக இருந்தபோதும், டப்பிங் கொடுப்பதற்காக நேரத்தை ஒதுக்கியிருந்தார். மிக அற்புதமான வேலையை அவர் செய்திருக்கிறார். தன் பாணியிலான நகைச்சுவையையும் குரலில் சேர்த்திருக்கிறார் " என்கிறார் இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம். தொடக்கத்திலேயே இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜாவும் ஆண்ட்ரியாவும் இணைந்து நாய் நடிக்கும் காட்சிகளுக்காக டூயட் பாடியுள்ளார்கள்.

"நீண்ட இடைவேளைக்குப் பிறகு குடும்பங்கள் கொண்டாடும் கமர்சியல் படமாக அன்புள்ள கில்லி இருக்கும். குடும்பத்துடன் அனைவரும் தியேட்டரில் ரசித்து பார்க்கும் படமாகவும் அது இருக்கும். குழந்தைகள் இந்தப் படத்தை கொண்டாடி தீர்க்கப்போகிறார்கள்" என்றும் இயக்குநர் ஸ்ரீநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிரபல நடிகை ஶ்ரீரஞ்சனியின் மகன் மைத்ரேயா முன்னணி பாத்திரத்தில் நடிக்க, அவருடன் ஒரு லேப்ராடர் வகை நாயும் நடிக்கிறது.