சினிமா

ரீலில் வில்லன்; ரியலில் ஹீரோ: 6 மாடி ஹோட்டலை மருத்துவத்துறையினர் ஓய்வுக்காக அளித்த நடிகர்

webteam

பாலிவுட் நடிகரான சோனு சூட் தன்னுடைய 6 மாடி ஹோட்டலை மருத்துவத்துறையினர் ஓய்வுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 734 ஆக அதிகரித்துள்ளது. 166 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 473 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு ஆயிரத்து 135 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 72 பேர் உயிரிழந்துள்ளனர். 117 பேர் குணமடைந்துள்ளனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிராக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலதரப்பினரும் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். வீட்டிற்கு செல்லாமல் மருத்துவமனை, விடுதி என அங்கேயே தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், பாலிவுட் நடிகரான சோனு சூட் தன்னுடைய 6 மாடி ஹோட்டலை மருத்துவத்துறையினர் ஓய்வுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார். இது குறித்து மாநகராட்சிக்கு தகவலை வெளியிட்டுள்ளார். 

இது குறித்து தெரிவித்துள்ள அவர், மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இரவும், பகலும் உழைத்து வரும் நம் நாட்டின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பாரா மருத்துவ ஊழியர்களுக்காக என்னால் முடிந்த உதவியைச் செய்வதில் பெருமை அடைகிறேன். மும்பையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள், ஓய்வெடுக்க ஒரு இடம் தேவை. இது தொடர்பாக மாநகராட்சி மற்றும் தனியார் மருத்துவமனைகளை அணுகி தங்குபவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆலோசித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக நடிகர் ஷாருக்கான் மும்பையில் உள்ள தன்னுடைய 4 மாடி அலுவலகத்தை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வார்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என மாநகராட்சிக்கு அனுமதி வழங்கி இருந்தார். தேவையான நேரத்தில் உதவிகளை செய்துவரும் நடிகர்களை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் இணையத்தில் பாராட்டி வருகின்றனர்.