சினிமா

விநாயகர் சதுர்த்திக்கு சொந்த ஊர்களுக்குச் செல்ல புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவிய சோனு சூட்

விநாயகர் சதுர்த்திக்கு சொந்த ஊர்களுக்குச் செல்ல புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவிய சோனு சூட்

Sinekadhara

கொரோனா பரவ ஆரம்பித்ததிலிருந்தே பல நிவாரண உதவிகளை செய்து வருகிறார் பாலிவுட் நடிகர் சோனு சூட். அந்த வகையில் விநாயகர் சதுர்த்திக்கு தங்கள் சொந்த கிராமங்களுக்கு செல்ல புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவியுள்ளார்.

வரும் சனிக்கிழமை முதல் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கவுள்ளது. பண்டிகையைக் கொண்டாட புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மகாராஸ்டிரா மற்றும் கொங்கனில் உள்ள தங்கள் சொந்த கிராமங்களுக்கு திருப்பி அனுப்ப உதவியுள்ளார் சோனு சூட்.
ஏற்கனவே 300 பேருக்கும் அதிகமானோர் தங்கள் ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். மேலும் பலர் விரைவில் புறப்படவுள்ளனர்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்களைக்கூட ஏற்பாடு செய்துள்ளார்.


இதுபற்றி பேசிய சோனு சூட், சமீபத்தில் லாக்பாக் மற்றும் பிரபாதேவியில் உள்ள சித்திவிநாயக கோயிலுக்குப் பின்னால் வசிக்கும் சில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தன்னை ஒரு வேண்டுகோளுடன் அணுகியதாகவும், அவர்களுக்கு தேவையான அனைத்து அனுமதிகளுடனும் பேருந்துகளை ஏற்பாடு செய்ததாகவும் கூறியுள்ளார். சுமார் 300 பேர் ஐந்து நாட்களுக்குமுன்பு முதலில் சென்றுவிட்டதாகவும், மீதி பேர் விரைவில் புறப்படவிருப்பதாகவும் கூறியுள்ளார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாமல், மருத்துவ மாணவர்களுக்கும் உதவி வருகிறார். கிர்கிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், ரஷ்யா மற்றும் பிலிப்பைன்ஸில் சிக்கியுள்ள மருத்துவ மாணவர்களுக்கும் சொந்த ஊர்களுக்கு வர சோனு சூட் உதவியுள்ளார்.