சினிமா

கலை, மனிதநேயத் துறைக்கு சோனு சூட் பெயரைச் சூட்டிய ஐ.ஏ.எஸ் நிறுவனம்; நெகிழ்ந்த சோனு சூட்!

sharpana

ஆந்திராவில் உள்ள பிரபல ஐ.ஏ.எஸ் பயிற்சி நிறுவனம் ஒன்று கலை மற்றும் மனிதநேயத்துறைக்கு சோனு சூட்டின் பெயரைச் சூட்டி சிறப்பித்துள்ளது.

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் பரவத் தொடங்கியது. அதனால், மார்ச் 22 ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து அனைத்தும் தடை செய்யப்பட்டதால் புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் நடந்தே சென்றார்கள். அவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து பேருதவி செய்தார் நடிகர் சோனு சூட். கேரளாவில் சிக்கித்தவித்த ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணிபுரிந்த 60 க்கும் மேற்பட்ட பெண்களை விமானம் மூலம் அனுப்பி வைத்தார். பிலிப்பைன்ஸ், கிர்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் சிக்கித் தவித்த மாணவர்களை சொந்த செலவிலேயே விமானத்தில் இந்தியா கொண்டு வந்தார். 

மேலும், கொரோனா சூழலில் பள்ளிகள் மூடப்பட்டதால் ஏழை மாணவர்கள் கல்வி கற்க ஸ்மார்ட் போன்களை வாங்கிக்கொடுத்தது, டவர் கிடைக்காததால் மரத்தில் ஏறி படித்த மாணவர்களுக்காக டவர் அமைத்துக்கொடுத்தது, நீட் தேர்வு எழுதவிருந்த மாணவர்களுக்கு பயண உதவிகளைச் செய்தது என கல்வி சார்ந்த ஏராளமான விஷயங்களை செய்து மக்களின் பேரன்பை குவித்தார்.

இந்நிலையில், தொடர்ச்சியாக மாணவர்களின் கல்விக்காக  உதவிகளை செய்துவருவதால் சோனு சூட்டை கெளரவிக்க நினைத்த ஆந்திராவின் விஜயவாடாவில உள்ள பிரபலமான சரத் சந்திரா ஐ.ஏ.எஸ் அகாடமி நிறுவனம் தனது கலை மற்றும் மனிதநேயத்துறைக்கு சோனு சூட் பெயரைச் சூட்டி கெளரவித்துள்ளது.

இதனை, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சோனு சூட், ”இதனைப் பார்க்க எனது அம்மா இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று கையெடுத்துக் கும்பிட்டு நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருகிறார். ஏற்கெனவே, சோனு சூட்டின் சேவையை பாராட்டி ஐ.நா மேம்பாட்டுத் திட்டத்தின், சிறந்த மனிதநேய செயல்பாட்டாளருக்கான விருதையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.