சினிமா

30 ஆண்டு கால சிறையில் மகன்:அற்புதம்மாளுக்காக குரல் கொடுத்த கார்த்திக்சுப்புராஜ்

30 ஆண்டு கால சிறையில் மகன்:அற்புதம்மாளுக்காக குரல் கொடுத்த கார்த்திக்சுப்புராஜ்

webteam

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைதண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் தாயான அற்புதம்மாள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தனது மகனை விடுதலை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், “ எனது மகன் 30 ஆண்டுகாலம் சிறைதண்டனை அனுபவித்து முடித்துள்ளான். அவன்
குற்றவாளி இல்லை என கூறி ஐபிஎஸ் அதிகாரி தியாகராஜன் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அவனுக்கு
சிறுநீரக சம்பந்தப்பட்ட பிரச்னைகள் உள்ளது. அதனால் அவனுக்கு தொடர் மருத்துவ சிகிச்சைத் தேவைப்படுகிறது. அது சிறையில் சரிவர
கிடைப்பதில்லை. வாழ்வின் பெரும்பகுதியை அவன் சிறையில் கடத்திவிட்டான். ஆகையால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என
முதல்வர் ஸ்டானிடம் நான் கோரிக்கை வைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், 31 ஆண்டு காலமாக போராடும் இந்த தாயின் நீதிக்கு இது மிக நீண்ட காலம் என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக சிறையில் 30 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ விசாராணைக்குழுவும் 7 பேர் விடுதலையில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று கூறியது. இந்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதினார்.