சினிமா

‘பத்தல பத்தல’ பாடலில் மத்திய அரசு மீது விமர்சனம் -கமல் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சங்கீதா

‘விக்ரம்’ படத்தின் முதல் சிங்கிள் நேற்று வெளியானநிலையில், அந்த பாடல் வரியை நீக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடப்போவதாக நடிகர் கமல்ஹாசன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் புகார் மனு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வருகிற ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள "பத்தலே பத்தலே" பாடல் நேற்று வெளியானது. இந்த பாடலில் அமைந்துள்ள வரிகள் மத்திய அரசை கிண்டல் செய்யும் வகையிலும், சாதி ரீதியான பிரச்சனைகளை தூண்டும் வகையிலும் அமைந்திருப்பதாக சமூக ஆர்வலர் செல்வம் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் இணையம் வாயிலாக புகார் அளித்துள்ளார்.

மேலும், இந்த சர்ச்சைக்குரிய பாடல் வரிகளை நீக்கி, பாடலை எழுதிய மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உயர் நீதிமன்றத்தில் ‘விக்ரம்’ படத்தை தடை செய்ய மனு தாக்கல் செய்யப்படும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.