கன்னட சினிமாவின் முன்னணி இயக்குனரும் நடிகருமான உபேந்திரா தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமானவர்தான். விஷால் நடித்த சத்யம் படத்தில் நடித்துள்ளார். தற்போது ரஜினிகாந்துடன் கூலி படத்திலும் நடித்து வருகிறார்.
இவர் ஹரி பிலிம்ஸ் எல்.எல்.பி. & வீனஸ் என்டர்டெய்னர்ஸ் சார்பில் ஜி.மனோகரன் மற்றும் கே.பி. ஸ்ரீகாந்த் தயாரித்திருக்கும் Ui என்ற திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். அந்த திரைப்படமானது நேற்று பான் இந்தியா திரைப்படமாக திரையரங்குகளில் வெளியானது.
ஆக்ஷன் திரைப்படமான யுஐ-யில் ரேஷ்மா நானய்யா, சன்னி லியோன், சாது கோகிலா, ஜிஷு சென்குப்தா, முரளி சர்மா என பலர் நடித்துள்ளனர். இதைக்காண திரையரங்குக்கு சென்ற ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு வசனம் ஒன்று திரையில் தோன்றி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு திரையில் தோன்றிய வரிகளில் எழுத்தப்பட்டது என்னவென்றால், ’புத்திசாலிகள் முட்டாள்களை போல் தெரிவார்கள், முட்டாள்கள் தங்களை புத்திசாலிகளை போல் காட்டிக்கொள்வார்கள், நீங்கள் முட்டாளாக இருந்தால் முழு படத்தையும் பாருங்கள், நீங்கள் புத்திசாலியாக இருந்தால் தியேட்டரை விட்டு வெளியேறுங்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.
இதை பார்த்த ரசிகர்கள், ‘என்னப்பா இப்படி போடுறாங்க’ என்று கோபப்பட்டு வெளியே செல்ல முயன்றாலும், பணம்கொடுத்து டிக்கெட் பெற்றுவிட்ட ஒரே காரணத்தால் வேறு வழியில்லாமல் படத்தை பார்த்துவிட்டுதான் வர வேண்டி இருக்கிறது..
படம் கதை ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் எப்படி இருக்கப்போகிறது என காண சென்றவர்களுக்கு, கதை தொடங்குவதற்கு முன்பே இப்படிப்பட்ட வரிகளை வந்தது அதிர்ச்சிதான்!
இதுதொடர்பாக புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.