Madharaasi Sivakarthikeyan
சினிமா

மதராஸியின் முதல் வார கலெக்ஷன்? டாப் 5யில் இடம்பிடித்த சிவகார்த்திகேயன் | Madharaasi | SK

மதராஸி விமர்சன ரீதியில் கலவையான விமர்சனங்களையே பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பே கிடைத்தது.

Johnson

சிவகார்த்திகேயன் - முருகதாஸ் கூட்டணியில் உருவான `மதராஸி' செப்டம்பர் 5ஆம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகும் வரை பெரிய ஹைப் இல்லை என சொல்லப்பட்டாலும் முதல் காட்சிக்குப் பிறகு டிக்கெட் விற்பனை சிறப்பாகவே இருந்தது. இந்திய அளவில் படத்தின் முதல் நாள் கலெக்ஷன் 13.65 கோடி (NET) என சொல்லப்பட்டது. தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ், படத்தின் முதல் நாள் கலெக்ஷன் தமிழ்நாட்டு அளவில் 12.8 கோடி (GROSS) எனவும், இரண்டு நாட்களில் படம் உலக அளவில் 50+ கோடி (GROSS) வசூலித்துள்ளது எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

மதராஸி விமர்சன ரீதியில் கலவையான விமர்சனங்களையே பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பே கிடைத்தது. படம் வெளியாகி ஒரு வாரம் முடிந்திருக்கும் நிலையில், இந்திய அளவில் மதராஸி கலெக்ஷன் கிட்டத்தட்ட 50 கோடி (NET) என சொல்லப்படுகிறது. இது சிவாவின் முந்தைய படமான `அமரன்' படத்தை விட குறைவு தான். அமரன் முதல் வார இந்திய கலெக்ஷன் 85.65 (NET) கோடி. ஆனால் அமரனுக்கு நடந்தது எப்போதாவது நடக்கும் அதிசயம். அமரனுக்கு முன்பான சிவகார்த்திகேயன் படங்களின் முதல் வார இந்திய கலெக்ஷன் என எடுத்துக் கொண்டால், அவற்றை விட மதராஸி சிறப்பான வசூலை பெற்றுள்ளது என சொல்லலாம். 

இந்தாண்டு தமிழ் சினிமாவில் இந்திய அளவிலான முதல் நாள் கலெக்ஷன் பொறுத்தவரை, முதல் இடத்தில் இருப்பது ரஜினியின் `கூலி' 65 கோடி, இரண்டாவது இடத்தில் அஜித்தின் `குட் பேட் அக்லி' 29.25 கோடி, மூன்றாவது இடத்தில் அஜித்தின் `விடாமுயற்சி' 26 கோடி, நான்காவது இடத்தில் சூர்யாவின் `ரெட்ரோ' 19.25 கோடி, ஐந்தாவது இடத்தில் கமல்ஹாசனின் `தக் லைஃப்' 15.05 கோடி. முதல் ஐந்து இடத்தில் வரவில்லை என்றாலும், மதராஸி மூலம் ஆறாவது இடத்தை பிடித்தார் சிவா.

Coolie, GBU, Vidaamuyarchi, Retro

படம் வெளியாகி ஒருவாரம் கடந்த நிலையில் டாப் 5 பட்டியலில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. முதல் இடத்தில் ரஜினியின் `கூலி' 223.5 கோடி, இரண்டாவது இடத்தில் அஜித்தின் `குட் பேட் அக்லி' 113.85 கோடி, மூன்றாவது இடத்தில் அஜித்தின் `விடாமுயற்சி' 71 கோடி, நான்காவது இடத்தில் சூர்யாவின் `ரெட்ரோ' 51.05 கோடி இருக்க, ஐந்தாவது இடத்தில் சிவகார்த்திகேயனின் `மதராஸி' 49 கோடியுடன் வந்திருக்கிறது. உலக அளவில் மதராஸியின் வசூல் கிட்டத்தட்ட 78 கோடி என சொல்லப்படுகிறது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் என்ன? எந்த இடத்தை பிடிக்கப் போகிறார் சிவா என்பதை எல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்.