ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த அனுபவத்தை எஸ்ஜே சூர்யா பகிர்ந்தார். நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பின் போது, ரஜினி சார் 'இங்க பாரு, ரொம்ப பண்றீங்க' என கூறிய தருணம் அவருக்கு மறக்க முடியாதது. சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது கனவுக்கு மேல் என அவர் உணர்ச்சிகரமாக தெரிவித்தார்.
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'ஜெயிலர் 2. கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான 'ஜெயிலர்' படத்தின் இரண்டாவது பாகமாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. ரஜினி உடன் சேர்ந்து எஸ் ஜே சூர்யா, ரம்யா கிருஷ்ணன், சுராஜ், வித்யாபாலன் என பல திரைநட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இன்னும் 2 நாட்களில் அக்டோபர் 15ஆம் தேதி படம் வெளியாகவிருக்கும் நிலையில், இப்படத்தின் முன்பதிவு தொடங்கி 30 கோடிக்குமேல் சென்றுகொண்டிருக்கிறது.
இந்நிலையில் திரைப்படம் வெளியாகவதற்கு முன்பாக இசை வெளியீட்டு விழா நடத்தப்படாமல், அதற்கு பதிலாக சிறப்பு நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அதில் திரைப்படத்தில் நடித்த அனைவரும் கலந்துகொண்டு பேசியிருந்தனர். அப்போது ரஜினிகாந்த் சாருடன் இணைந்து நடித்தது எப்படி இருந்தது என்ற கேள்வி எஸ்ஜே சூர்யாவிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டா சினிமாத்துறைக்குள் வந்து தற்போது சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது மிகப்பெரிய விசயமாக பார்க்கிறேன். கல்லூரில படிக்கும்போதுல ஆரம்பிச்சு, வேலை செய்யும்போது, துணை இயக்குநர், இயக்குநராக ரஜினி சாரின் நடிப்பை பார்த்து பார்த்து ரசிச்சிட்டு, தற்போது அவருடன் சேர்ந்து நடித்தது விவரிக்க முடியாது ஒரு அனுபவம். அதை கனவு நினைவான தருணம் என்று கூட நான் சுருக்க விரும்பவில்லை, இது அதற்கும் மேலான ஒரு விசயம்” என பேசினார்.
தொடர்ந்து அவருடன் சேர்ந்து நடிக்கும் போது ஒரு விசயம் நடந்தது என கூறிய எஸ்ஜே சூர்யா, “ரஜினி சார் என்ன முதல்ல பார்த்ததும் வாங்க வாங்க என அரவணைச்சிக்கிட்டாரு. நெல்சன் சார் இயக்கத்தில் தலைவர் கூட நடிச்சது வேற லெவெலா இருந்தது. படப்பிடிப்பின் போது ஒரு விசயம் நடந்தது, எனக்கும் ரஜினிசாருக்கும் சேர்ந்து ஒரு ஷாட் இருந்தது. அதில் இருவரும் நடித்தபிறகு, நெல்சன் ஒரு நான்காவது டேக் ஓக்கேன்னு சொல்லிட்டார். ஆனால் நான் நெல்சன் சாரிடம் ஒன்மோர் போலாம் சார்ன்னு சொன்னன். உடனே ரஜினிசார் ஒரு ரியாக்சன் கொடுத்தாரு, இங்க பாரு.. எஸ்ஜே சூர்யா ரொம்ப பண்றீங்க, நெல்சன் ஓக்கே சொல்றதே பெரிய விசயம், இதுல நீங்க ஒன்மோர் வேற கேட்குறீங்கனு சொன்னாரு” என தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.