சினிமா

சிவகார்த்திகேயனின் ‘டான்‘ ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு? - வெளியான தகவல்

சிவகார்த்திகேயனின் ‘டான்‘ ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு? - வெளியான தகவல்

சங்கீதா

சிவகார்த்திகேயனின் நடிப்பில், அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டான்’ திரைப்படத்தை கோடை விடுமுறையை முன்னிட்டு மே 12-ல் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளிவர இருந்த பல படங்கள், கொரோனா இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக அறிவிப்பு தேதியின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஊரடங்குகள் தற்போது விலக்கிக்கொள்ளப்பட்டு, கொரோனா பாதிப்பு குறைந்து வருவதைத் தொடர்ந்து, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் அடுத்தடுத்து படங்கள் ரிலீசாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது-

அதன்படி விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’, விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’, அஜித்தின் ‘வலிமை’ உள்ளிட்ட படங்கள் இந்த மாதத்தில் வரிசையாக ரிலீசாகி உள்ளன. சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படம் மார்ச் 10-ம் தேதியும், பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம், மார்ச் 11-ம் தேதியும் வெளியாகிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டான்’ திரைப்படம், மே 12-ம் தேதி வெளியாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வரும் மார்ச் மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தநிலையில், எஸ்.எஸ். ராஜமெளலியின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்.’ படமும், வரும் மார்ச் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனால் சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தை கோடை விடுமுறையை முன்னிட்டு மே 12-ல் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

‘டான்’ படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள நிலையில், 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையையும் லைகா நிறுவனமே கைப்பற்றியுள்ளது. ஆகையால் ஒரே தேதியில், ஒரு நிறுவனத்தின் இரண்டு படங்கள் வெளியானால், திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.