சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'ஹீரோ' திரைப்படம் தனது கதையை திருடி எடுக்கப்பட்டுள்ளதாக இளம் இயக்குநர் ஒருவர் புகார் அளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கி, சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'ஹீரோ' திரைப்படம் வெளியானது. இந்தப் படம் வெளியான அடுத்த சில மணிநேரங்களிலேயே ஆன்லைனில் சட்ட விரோதமாக வெளியானது. அதை அறிந்த படக்குழு மிகுந்த கவலையில் ஆழ்ந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி இப் படத்தின் வசூல் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக படக்குழு இதனை முன்கூட்டியே வெளியிட்டது. அதற்கு இடையூறாக அமைந்தது ஆன்லைன் வெளியீடு.
இந்தியாவிலுள்ள கல்வி முறைமையில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களைப் பற்றி இந்தப் படம் விரிவாக பேசியுள்ளது. இந்நிலையில் மித்ரன் தனது கதையைத் திருடி 'ஹீரோ' படத்தை எடுத்துள்ளதாக இயக்குனர் அட்லீயின் உதவியாளரான போஸ்கோ பிரபு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். ஆகவே படம் குறித்த புதிய சிக்கல் ஒன்று முளைத்துள்ளதாக தெரிகிறது.
இயக்குநரும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவருமான கே.பாக்யராஜிடம் திருட்டு நடந்ததாகக் கூறி புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. இவருக்கு, போஸ்கோ பிரபு எழுதியுள்ள கடிதத்தில் 2017 பதிவு செய்யப்பட்ட எனது கதைக்களத்தைப் போன்றே 'ஹீரோ' கதை இருப்பதாக கூறியுள்ளார்.
கே பாக்யராஜ் இந்த விவகாரம் தொடர்பாக இயக்குனர் பி.எஸ் மித்ரானுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. விளக்கம் கேட்டு கடிதம் சென்று 20 நாட்களுக்கு மேல் ஆனதாக கூறப்பட்டது. இந்நிலையில், கே.பாக்யராஜூக்கு, இயக்குநர் மித்ரன் ஒரு விளக்க கடிதம் அளித்துள்ளார். அதில், சங்க நிர்வாகிகள் 25 பேர் முன்னிலையில் தனது கதைக்கும் அவர் கதைக்கும் சம்பந்தமில்லை என விளக்கியதாக தெரிவித்துள்ளார். மேலும் முறையாக இரண்டு கதைகளையும் ஒப்பிட்டு பார்த்து சரியான முடிவை எடுக்க வலியுறுத்தியுள்ளார். தற்சமயம் படப்பிடிப்பில் உள்ளதால் நேரில் வர இயலவில்லை என்றும் அவரது விளக்கம் கடிதத்தில் கூறியுள்ளார்.