சினிமா

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிக்கும் ‘கொட்டுக்காளி‘ -ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

சங்கீதா

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதியப் படத்தில் சூரி மற்றும் மலையாள நடிகை அன்னா பென் நடிப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

விமல் - லக்ஷ்மி மேனனின் நடிப்பில் உருவான ‘மஞ்சப்பை’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்து, பின்னர் ‘கூழாங்கல்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பி.எஸ். வினோத்ராஜ். பல்வேறு சர்வதேச விருதுகளை இந்தப் படம் பெற்றிருந்தது. கடந்த 2021-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ், அடுத்ததாக சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் புதியப் படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது.

இதற்கான பூஜையும் சமீபத்தில் போடப்பட்டது. சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை அன்னா பென் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. மலையாளத்தில் ‘கும்பலங்கி நைட்ஸ்’, ‘ஹெலன்’, ‘கப்பா’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான அன்னா பென், இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்நிலையில், இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.