சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி pt web
சினிமா

யாருக்கு ‘பராசக்தி’ தலைப்பு? ஆதாரங்களை வெளியிடும் இருதரப்புகள்.. SKவிற்கு மேலும் ஒரு சிக்கல்?

ஏற்கனேவே தலைப்பில் ஒரு சிக்கல் இருக்க, இந்த விவகாரம் இன்னும் சூடுபிடிக்கும்படி சிவகார்த்திகேயனின் பராசக்தி டைட்டில் டீசர் வெளியாகி சில மணி நேரத்திற்குள், தெலுங்கில் தன் படத்திற்கு `பராசக்தி' என பெயரைப் பதிவு செய்திருந்ததை விஜய் ஆண்டனி வெளியிட்டார்.

Johnson

பராசக்தி

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துவரும் திரைப்படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. சிவகார்த்திகேயனின் 25வது படமான இதற்கு ‘பராசக்தி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தி திணிப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது என சொல்லப்படுகிறது. இதில் ரவி மோகன், அதர்வா, ஶ்ரீலீலா ஆகியோரும் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

parasakthi - sivakarthikeyan movie teaser

படத்தின் டைட்டில் டீசர் இன்று மாலை வெளியிடப்பட்டது. கல்லூரி வளாகம் ஒன்றின் கட்டடத்தில் பச்சையப்பன் என எழுதப்பட்டதைக் காட்டி டீசர் துவங்குகிறது. ஒரு போராட்டத்துக்கு ஆட்களை திரட்டும் நாயகன், உணர்ச்சி பொங்க ‘சேனை ஒன்று தேவை.. பெருஞ்சேனை ஒன்று தேவை’ என முழக்கமிடுவதுடன் டீசர் முடிகிறது. கண்டிப்பாக இது அரசியல் பேசக் கூடிய படம் என்பது உறுதியாக தெரிகிறது. ஆனால், இப்போது வேறு ஒரு விஷயம் இந்தப் படத்தின் மூலம் கவனத்திற்கு வந்துள்ளது.

சக்தித் திருமகன்

இதே நாளில், காலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் அருண் பிரபு இயக்கி வரும் படத்தின் தலைப்பு ‘சக்தித் திருமகன்’ என அறிவிக்கப்பட்டது. விஜய் ஆண்டனிக்கும் இப்படம் 25வது படம். இப்போது இரண்டு படங்களுக்கும் தலைப்பு விஷயத்தில் ஒரு சின்ன உரசல் வந்துள்ளது. தமிழில் விஜய் ஆண்டனி படத்திற்கு ‘சக்தித் திருமகன்’ என தலைப்பு இருந்தாலும், தெலுங்கு உட்பட மற்ற மொழிகளில் ‘பராசக்தி’ என்றே பெயரிடப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் பராசக்தி தமிழில் மட்டும் வெளியாகும்பட்சத்தில் பெரிய சிக்கல் ஏதும் இல்லை. ஆனால், அந்தப் படமும் மற்ற மொழிகளில் வெளியாகிறது. பராசக்தி தமிழ் டீசருக்கு அடுத்தபடியாக தெலுங்கு டீசர் வெளியிடப்பட்டது. அதிலும் பராசக்தி எனவே தலைப்பு உள்ளது. எனவே, இப்போது தேவையில்லாத குழப்பம் ஏற்படுள்ளது.

மேலும், ‘பராசக்தி’ நடிகர் சிவாஜி கணேசனின் முதல் படம். சிவாஜியுடன் பிரிக்க முடியாத பிணைப்பைக் கொண்டுள்ள தலைப்பு. இதனால், சிவகார்த்திகேயன் படத்தின் தலைப்பு பராசக்தி என பேசப்பட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே, கடந்த வெள்ளியன்று (ஜன 24), நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் கே.சந்திரசேகரன் கருத்தொன்றைத் தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில், "ஏற்கனவே பராசக்தி என்ற பெயரில் ஒரு திரைப்படம் எடுக்க முயன்றபோது, அதற்கான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, 'மீண்டும் பராசக்தி' என்ற பெயரில் அந்தத் திரைப்படம் வெளியானது. தற்போது மீண்டும், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் திரைப்படத்திற்கு 'பராசக்தி' என்று பெயர் சூட்டியிருப்பது லட்சோசோப லட்சம் நடிகர் திலகம் சிவாஜி ரசிகர்களை மட்டுமல்லாமல், உலகெங்கிலும் வாழும் தமிழ் சினிமாவை நேசிப்பவர்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் படக்குழுவினரை "பராசக்தி" என்ற பெயரை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். பெயரை மாற்றவில்லை என்றால் ரசிகர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்திருந்தார்.

அறிக்கை வெளியிடும் நிறுவனங்கள்

ஏற்கனேவே தலைப்பில் ஒரு சிக்கல் இருக்க, இந்த விவகாரம் இன்னும் சூடுபிடிக்கும்படி சிவகார்த்திகேயனின் பராசக்தி டைட்டில் டீசர் வெளியாகி சில மணி நேரத்திற்குள், தெலுங்கில் தன் படத்திற்கு `பராசக்தி' என பெயரைப் பதிவு செய்திருந்த விஜய் ஆண்டனி, அதற்கான ஆதாரத்தை வெளியிட்டார். தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 22ம் தேதி தலைப்பை பதிவு செய்திருப்பது அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பராசக்தி தலைப்பை பயன்படுத்துவதற்கான அனுமதியை, பராசக்தி படத்தை தயாரித்த ஏ வி எம் நிறுவனத்திடம் இருந்து, டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் பெற்ற அறிக்கையை அவர்களும் வெளியிட்டுள்ளனர்.

மற்றுமொரு சிக்கல்

விஜய் ஆண்டனி தரப்பு பராசக்தி தலைப்பை தமிழில் பயன்படுத்தவில்லை. எனவே, தலைப்பு அனுமதி பெற்றிருந்தாலும், மற்ற மொழிகளில் பயன்படுத்த சிவா தரப்புக்கு எந்த அளவு உரிமை உண்டு? அல்லது இதில் வேறு எதுவும் ஏற்பாடு இருக்கிறதா? இதில் யார் தரப்பில் நியாயம் உண்டு? போன்ற விஷயங்கள் என்ன என்பது அடுத்தடுத்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், பராசக்தி என்ற தலைப்பு, சிவா மற்றும் விஜய் ஆண்டனி இருவருக்கும் இது 25 படம் என்பது தாண்டி இன்னொரு சம்பந்தமும் இவ்விரு படங்களுக்கும் உள்ளது. பராசக்தி பட நாயகன் சிவ கார்த்திகேயன் மற்றும் சக்தித் திருமகன் பட இயக்குநர் அருண் பிரபு இவர்கள் இருவரும் உறவினர்கள்.