விஜய் டிவி சூப்பர் சிங்கரில் இனியமையான பாடல்களைப் பாடி இதயத்தை இதமாக்கிய சிவாங்கி ’குக் வித் கோமாளி’ மூலம் தமிழக மக்களை மனம் விட்டு சிரிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். 'சிவாங்கிக்காகவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பர்க்கிறோம்" என்று சொல்லும் அளவிற்கு தனது திறமையால் தனி ரசிகர் கூட்டத்தையே குவித்திருக்கிறார். அதை, நிரூபிக்கிறது நடிகைகளுக்கே டஃப் ஃபைட் கொடுக்கும் அளவிற்கு 2 மில்லியன்களுக்கும் அதிகமான இவரது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை. தற்போது, சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் நடிகையாக புது அவதாரம் எடுத்திருக்கும் சிவாங்கியிடம் பேசினோம். செம்ம கல கலப்பு.. செம்ம சீரியஸ் என இயல்பாக பேசினார்...
நடிப்பு அனுபவம் எப்படி இருக்கிறது?
நடிப்பது எனக்கு புது எக்ஸ்பீரியன்ஸ். ஒரு புதுமுக நடிகருக்கு நடிப்பதுதான் சவாலானது. டிவி நிகழ்ச்சியில் தோன்றுவது போல சினிமா கிடையாது. சினிமாவில் கொஞ்சம் எக்ஸ்டா எஃபோர்ட் போட்டு நம்ம ரியாக்ஷன்களை பதிவு செய்யவேண்டும். அப்போதான் ஃப்ரேம்ல பார்க்க நல்லாருக்கும். இரண்டுக்கும் இதுதான் வித்தியாசம்.
சமூக வலைதளங்கள் முழுக்க மீம்ஸ்களில் நிரம்பி வழிகிறீர்களே? பார்க்கிறீர்களா?
ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதுக்கெல்லாம் கடவுளுக்குத்தான் நன்றி சொல்வேன். சமூக வலைதளங்கள் மட்டுமல்ல. வெளியிடங்களுக்குச் செல்லும்போதும் ’சிவாங்கி அக்கா, சிவாங்கி’ என்று அன்போடு வந்து பேசுகிறார்கள். ’உங்களை ரொம்பப் பிடிக்கும். ஷோ சூப்பரா போகுது’ என்று பாராட்டுகிறார்கள். இதைவிட என்ன சந்தோஷம் இருந்துவிடப் போகிறது? சின்ன வயசுல எதுவுமே எதிர்பார்த்ததில்லை. எதையும் பண்ணனும்னு நினைச்சதில்லை. எல்லாமே தானா அமையுது. இது முழுக்க முழுக்க கடவுளின் ஆசிர்வாதம்தான். என்னோட கிரடிட் எதுவுமே இல்லை. அப்படி எடுத்துக்கவும் மாட்டேன். நெகட்டிவ், பாஸிட்டிவ் என எது கிடைச்சாலும் கடவுளுக்கே கொடுத்துடுறேன்.
பாடகி, காமெடி, நடிப்புன்னு கலக்குறீங்களே? இன்னும் உங்களுக்குள்ள எத்தனை திறமைகளை அடக்கி வச்சிருக்கீங்க?
நான் சின்ன வயசுல படிப்புல சரியான ஜீரோ. ஃபெயில் ஆகிட்டே இருப்பேன். கணக்குல 100 க்கு 9 மார்க்லாம் வாங்கிய அனுபவம் இருக்கு. பத்தாம் வகுப்பில் கம்மியான மார்க்தான் வாங்கினேன். அதனால், ப்ளஸ் டூவிலாவது கொஞ்சம் படிச்சி வேற லெவல் மார்க் வாங்கணும்னு கடுமையா உழைச்சிப் படிச்சேன். அதுக்கு பலனும் கிடைச்சது. அக்கவுண்ட்ஸ் பாடத்தில் சென்டமும், பொருளாதாரத்தில் 200 க்கு 198 மதிப்பெண் வாங்கி வகுப்பில் செகெண்ட் கிரேட் வந்தேன். இந்த மாதிரி மார்க் எடுத்து ப்ளஸ் டூவில் 92 சதவீத மதிப்பெண்கள் எடுத்து பாஸ் பண்ணேன்.
எதிலும் ரொம்ப பெரிய ஆர்வம் இருந்ததில்லை. சின்ன வயசுல பெயிண்டிங் நல்லா பண்ணுவேன். அவ்ளோதான். மத்தபடி, பாடகியாகவேண்டும் என்பதுதான் ஆசையா இருந்தது. ஆனா, அதுக்காக கடுமையான உழைப்பை போட்டதில்லை. உழைப்பை செலுத்தவேண்டும் என்பதற்காகத்தான் என்னை அம்மா சூப்பர் சிங்கருக்கு அனுப்பினார். இது எதுவுமே இல்லையென்றால், பிகாம் படிச்சிட்டு எதாவது வேலைக்கு போயிருப்பேன்.
எல்லோரையும் சிரிக்க வைக்கும் உங்களை அழ வைக்கும் சம்பவம் எது?
ஏதாவது, அழவைக்கும் சம்பவம் நடந்தால் அப்போதே நல்லா அழுது முடிச்சிடுவேன். அதன்பிறகு, அதனை நினைத்துப் பார்க்கமாட்டேன்.
உங்கக் குரலை மாத்தி மாத்தி பேசுறீங்களே? ஸ்பெஷல் பயிற்சி எடுத்துக்கறீங்களா?
இதுக்கெல்லாம் எப்படி ட்ரைனிங் எடுக்கமுடியுமா? சின்ன வயசுலருந்தே என் குரல் இப்படித்தான். ஆரம்பத்தில், என் குரலை பலர் விமர்சித்தார்கள். இப்போது அதனையே பாராட்டித் தள்ளுகிறார்கள். நான் மாற்றி எல்லாம் பேசவில்லை. எப்போதும் ஒரே மாதிரிதான் பேசுகிறேன். பேசும்போது இப்படித்தான் இருக்கும். பாடும்போது அதுவா மாறிக்கொள்கிறது. மற்றபடி ஒரே வாய்ஸ்தான்.
உங்கக் குரல் உங்களுக்கு ப்ளஸ்ஸா? நெகட்டிவா?
நான் எதுவுமே நினைக்கல. சிலபேர் என் குரலை விமர்சனம் செய்தார்கள். அப்படி விமர்சிக்கும்போது எனக்கு கொஞ்சம் கோவம் வந்துச்சி. கொஞ்ச நேரம் வருத்தப்படுவேன். அப்றம் எல்லாத்தையும் மறந்துடுவேன். அவ்ளோதான்.
காமெடி மேல எப்படி ஆர்வம் வந்தது?
என் அம்மாவுக்கு நல்ல காமெடி சென்ஸ் உண்டு. இப்போதும் அப்படித்தான் இருக்கிறார். அதனால், எனக்கும் பாட்டு திறமை அம்மாவிடம் இருந்து வந்ததுபோல், காமெடி செய்யும் திறமையும் வந்துவிட்டது. ஆனால், உண்மையில் ஷோக்களில் தனியாக காமெடி செய்யவேண்டும் என்று நான் செய்யவில்லை. இயல்பாக இருக்கிறேன். அது பார்வையாளருக்கு காமெடி செய்வதுபோல் தெரிந்து சிரிக்கிறார்கள். நான் அறிமுகமான சூப்பர் சிங்கரிலேயே காமெடியாத்தான் பேசுவேன். அது ’குக் வித் கோமாளி’யில் கொஞ்சம் ஹெவியாக வந்துவிட்டது. அவ்வளவுதான்.
மறக்க முடியாத பாராட்டு?
நிறைய பேர் பாராட்டி இருந்தாலும் சிவகார்த்திகேயன் அண்ணா பாராட்டியது மறக்க முடியாதது. ’ரொம்ப க்யூட்டா பண்றம்மா. என்னை மாதிரியே இமிடேட் பண்ணாம காமெடி பண்றீங்க’ என்றார்.
’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இத்தனை நாள் இருக்கீங்களே? சமைக்கத் தெரியுமா?
தயிர் சாதமும் நூடுல்ஸும் செய்யத் தெரியும். அவ்வளவுதான். மற்றப்படி, சமைக்கவே வராது. அதனால, அந்தப் பக்கமும் போகவே மாட்டேன். சமைக்க ஆர்வம் இருக்கு. ஆனா, வரமாட்டுது. நான் என்ன பண்றது? அப்படியே கிச்சன் பக்கம் சென்றாலும் அம்மா விடமாட்டார். ஏன்னா, நான் சொதப்பி வச்சிடுவேன்.
சிவாங்கிக்கு பிடித்த காமெடி நடிகர்?
எனக்கு ரீசண்டா யோகிபாபு அண்ணாவை ரொம்ப பிடிக்கும். ஆனா, ஆல்டைம் ஃபேவரைட்னா வடிவேலு சார்தான். அவர் குரலைக் கேட்டாலே சிரிப்பு தானா வந்துவிடும். யாரையும் காயப்படுத்தாமல் உடல்மொழியாலேயே சிரிக்க வைத்துவிடுவார். அடிக்கடி அவரது காமெடியைப் பார்ப்பேன். அவரது, இம்சை அரசன் புகைப்படங்களோடு என்னையும் மீம்ஸ் சேர்த்து போட்டதை பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டேன். ரொம்ப பெருமையா இருந்துச்சி. அவரோட, உடல்மொழியை நினைச்சாலே நாம் பொழைச்சிக்கலாம். ஆனால், என் தனித்தன்மையை நிரூபிக்கவே விரும்புகிறேன்.
பெண் காமெடி நடிகர்கள் குறைவாக இருக்கிறார்களே? எப்படி பார்க்கிறீர்கள்?
குறைவாக இருக்கிறார்கள்தான். ஆனால், காமெடி சென்ஸ் குறைவு கிடையாது. சினிமாவில் பெண்கள் இப்படித்தான் என்று காட்டியதால் பெண்களுக்கும் காமெடி வரும் என்று தெரியாமல் இருந்தது. காமெடி நடிகர்கள் மைண்ட் வாய்ஸில் பேசினாலே சிரித்து விடுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி சொல்வதில்லை. சினிமாவிலும் அப்படி காட்டுவதில்லை. அப்படி காட்டவேண்டும். பெண்களுக்கும் காமெடி சென்ஸ் இருக்கு. சினிமாவில் சரியாக காட்டப்படவில்லை. அவ்வளவுதான்.
எதிர்காலத்தில் பாடகி அல்லது காமெடி நடிகை எதில் சாதிக்கவேண்டும் என்பது விருப்பம்?
ஒரே துறை என்றில்லாமல் அனைத்து ஃபீல்டிலும் முழு உழைப்பக் கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
உங்கள் குடும்பம் எந்தளவுக்கு ஊக்கமாக இருக்கிறது?
என் குடும்பம் இல்லைன்னா நான் இல்லை. ரொம்பவே சப்போர்ட்டிவ். அம்மா நிறைய மியூசிக் கிளாஸ் பண்ணுகிறார். ஆனால், எனக்காக அதனையெல்லாம் பார்த்துக்கொண்டே அதற்கு நடுவில் என்னையும் பார்த்துக்கொள்கிறார். நீ அதைப் பண்ணு இதைப்பண்ணுன்னு சொல்லமாட்டார். எனக்கு என்ன வருகிறதோ அதை பண்ணவேண்டும் என்று சொல்வார். அதனால்தான், என்னால் சிறப்பாக பண்ண முடிகிறது
- வினி சர்பனா