எஸ்.ஜானகி எக்ஸ் தளம்
சினிமா

"அரைநூற்றாண்டு ஆறுதலே அடங்கிவிட்டாயா?" - எஸ்.ஜானகி மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்!

"தனது இனிமையான குரல், உணர்வுகளை வெளிப்படுத்தும் அபார திறன் மற்றும் இசைக்கான அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார். அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்” என முதல்வர் விஜய் பதிவிட்டுள்ளார்.

Prakash J

பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி (88), வயது முதிர்வு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவு, இசையுலகில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் விஜய், “இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர். பலமுறை தேசிய திரைப்பட விருதுகள் உட்பட எண்ணற்ற உயரிய விருதுகளைப் பெற்ற அவர், தனது இனிமையான குரல், உணர்வுகளை வெளிப்படுத்தும் அபார திறன் மற்றும் இசைக்கான அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார். அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்” எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், “மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் முதல் அனிருத் வரை ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய கானகோகிலம் ஜானகி அவர்களது இசைப்பயணம் மிக நீண்டது. அவரது மறைவு என்பது, வானொலி தொடங்கி ஸ்பாட்டிஃபை வரையில் அவரது அமுதகானங்களைத் தங்கள் இல்லங்களில் ஒலிக்கவிட்டு இரசிக்கும் தமிழ்நாட்டு மக்கள் உள்ளிட்ட தென்னிந்திய மக்களுக்கும், இந்தியத் திரைத்துறைக்கும் பேரிழப்பாகும்.இனிமையும் இளமையும் மாறாத தனது குரலால் காலத்தால் அழியாத பாடல்களைப் பாடிய அவர், என்றும் நம் இல்லங்களிலும் நெஞ்சங்களிலும் ஒலித்துக்கொண்டே இருப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “பல தலைமுறைகளின் இதயங்களை தனது இனிமையான குரலால் வருடிய ஜானகி, தனது ஆயிரக்கணக்கான பாடல்கள் வழியாக மக்களின் வாழ்வின் ஒவ்வொரு உணர்வுக்கும் குரலாக இருந்தவர். தமிழ் உள்ளிட்ட 20 இந்திய மொழிகளில் பின்னணி குரலாக ஒலித்து அவர் பாடிய கீதங்கள் மக்கள் மனங்களில் என்றும் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளன. அவரது மறைவு என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், “பாடல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்; அந்த அன்பை எங்குத் தேடுவேன் அம்மா? இறக்கி வைக்கமுடியாத சோகம் பலருக்கும் இருக்கும். அவருக்கும் ஆழ்ந்த இரங்கல்” எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது இரங்கல் பதிவில், “தன்னுடைய தேனமுதக் குரலால் தலைமுறை தலைமுறையாக மகிழ்வித்த ஜானகி அம்மா; அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து தனது இரங்கற்பாவில், “கானக் குயிலே

காலமானாயா?

அரைநூற்றாண்டு

ஆறுதலே

அடங்கிவிட்டாயா?

‘சிங்கார வேலனே தேவா’வில்

நாதஸ்வரத்தை வென்றுகாட்டிய

கீதவாணியே

முடிந்துவிட்டதா உன் மூச்சு?

தாய்மையாய் தமிழாய்

காதலாய் கருணையாய்

கண்ணீராய் புன்னகையாய்

எங்கள் வாழ்வோடு கலந்த

பாட்டரசி

உனக்கும் மரணமா?

‘நாதம் என் ஜீவனே’ என்றாயே

உன் நாதம் இருக்கிறது

ஜீவன் இல்லையே

சிரித்த முகமும்

சிவப்பு நிலாப் பொட்டும்

ஆடாமல் அசையாமல்

சித்திரம் பாடுவதுபோல்

செவ்வாய் அசைக்கும் அழகும்

கண்களை விட்டுக்

காணாமல் போகுமோ!

நீ

பாடமுடியாத பாடலென்று

எதுவும் இல்லை

உன் பாடல் கேளாமல்

இரவுகள் விடிவதில்லை

கண்ணதாசன் எழுதி

நீ பாடிய பல்லவி கொண்டே

புகழ்வணக்கம் செலுத்துகிறேன்

‘தூக்கம் உன் கண்களைத்

தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சில்

நிலவட்டுமே

அந்தத்

தூக்கமும் அமைதியும் நானானால்

உன்னைத்

தொடர்ந்திருப்பேன்

என்றும்

துணையிருப்பேன்’

வாழ்க நீ அம்மா” எனப் பதிவிட்டுள்ளார்.