சினிமா

மீ டூ விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் இல்லை - சின்மயி

webteam

மீ டூ விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் வழக்கு தொடர்ந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாடகி சின்மயி குற்றம்சாட்டியுள்ளார்.

நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் (CASTELESS COLLECTIVE) இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பறை இசையோடு தொடங்கிய இந்நிகழ்வில் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அதில் பங்கேற்ற நடிகை சின்மயி, பல்வேறு பாடல்களை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 

விழாவுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை கலைத்தெருவிழாவில் பங்கேற்று பாடல்களை பாடியது மிகுந்த மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. இவ்விழாவின் முக்கிய நோக்கமே சமத்துவம் தான். இன்றைய சூழ்நிலைக்கு இது மாதிரியான நிகழ்ச்சிகள் தேவையான ஒன்று. பாரம்பரிய கலாச்சார இசையான பறை,மேளம், நாதஸ்வரம்,தவில் போன்ற கலைகளை எல்லாரும் கற்றுக்கொள்ள வேண்டும். அதனை எதிர்காலத்தில் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் பாரம்பரிய கலைகள் அழியாமல் இருக்கும் என்றும் கூறினார்.

மேலும் மீடூ விவகாரத்தில் சட்டத்தில் மாற்றம் வேண்டும். அரசு சார்பில் குழு அமைக்கப்படும் என்று கூறினார்கள் அவர்கள் இதுவரை அமைக்கவில்லை. அரசிடம் இருந்து சரியான பதில் இல்லை. பாதிக்கப்பட்ட பல பேர் வழக்கு பதிவு செய்தும் இன்னும் நடவடிக்கை இல்லை. சட்டம் எங்களை கைவிட்ட ஒரு நிலைமை தான் இருக்கிறது. டப்பிங் யூனியனில் நீக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.