சினிமா

அடுத்தடுத்த அப்டேட்களால் குஷியில் சிம்பு ரசிகர்கள் - ‘பத்து தல’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

அடுத்தடுத்த அப்டேட்களால் குஷியில் சிம்பு ரசிகர்கள் - ‘பத்து தல’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

சங்கீதா

நடிகர் சிம்புவின் நடிப்பில் உருவாகி வரும் ‘பத்து தல’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்கு பிறகு சிம்பு, கௌதம் வாசுதேவ் மேனன் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'வெந்து தணிந்தது காடு'. இந்தப் படம் வருகிற செப்டம்பர் 15-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் நேற்று முன்தினம் அறிவித்தனர். இந்நிலையில், அடுத்ததாக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துள்ள சிம்புவின் ‘பத்து தல’ படம் வருகிற டிசம்பர் 15-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறித்துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீ முரளி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘முஃப்தி’ படத்தின் ரீமேக்தான் ‘பத்து தல’. அந்தப் படத்தை கன்னடத்தில் இயக்கிய இயக்குநர் நார்தன் தான் இந்தப் படத்தை முதலில் இயக்கினார். பின்னர் சில காரணங்களால் அவர் விலக ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ ஆகியப் படங்களின் இயக்குநர் கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கெளதம் கார்த்திக், பிரியா பவானிசங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இந்தப் படத்தில் ஏ.ஜி.ஆர் என்ற கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். ஏற்கனவே சிம்புவின் பிறந்தநாளையொட்டி வெளியான கிளிம்பஸ் காட்சிகள் வரவேற்பை பெற்றநிலையில், படத்தின் ரிலீஸ் தேதி அவரின் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. ஞானவேல் ராஜா தனது 'ஸ்டூடியோ கிரீன்' நிறுவனம் சார்பில் தயாரிக்க, ஒளிப்பதிவாளர் நவீன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். தற்போது நடிகர் சிம்பு தனது தந்தையின் உடல்நல குறைவு சிகிச்சை காரணமாக அமெரிக்காவில் உள்ள நிலையில், அவர் விரைவில் சென்னை திரும்பியதும் படத்தின் இறுதிப் படப்பிடிப்புகள் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.