படப்பிடிப்புத் தளத்தில் சிம்பு வைத்திருப்பது பிளாஸ்டிக் பாம்பு என படக்குழு விளக்கமளித்துள்ளது.
சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கிக் கொண்டிருக்கும் படம் ‘ஈஸ்வரன்’. பொங்கல் வரவாக வெளியாகவுள்ள இந்தத் திரைப்படத்தின் டீஸர் தீபாவளி அன்று வெளியாகும் என சிம்புவே அறிவித்து தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்புத் தளத்தில் சிம்பு பாம்பு பிடிப்பதைப் போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியது. விலங்குகள் மற்றும் பிற உயிரினங்களை சினிமாக்களில் பயன்படுத்தித் துன்புறுத்தக்கூடாது எனக் கூறியுள்ள நிலையில், இந்த வீடியோவைப் பார்த்த சமூக ஆர்வலர் ஒருவர் வனத்துறையிடம் புகார் தெரிவித்தார்.
இதுகுறித்து ஈஸ்வரன் படக்குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், படப்பிடிப்பின்போது சிம்பு கையில் இருப்பது பிளாஸ்டிக் பாம்பு எனவும், இனிமேல்தான் கிராபிக்ஸ் செய்யப்படவுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட காட்சியை படக்குழு வெளியிடவில்லை என்றும், அரசின் வழிகாட்டுதல்களின்படிதான் படப்பிடிப்பு நடப்பதாகவும் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும் வனத்துறை அதிகாரிகளிடம் விரைவில் இதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.