நடிகர் சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தீபாவளி நாளான இன்று வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் சிம்புவை வைத்து இயக்குநர் சுந்தர் சி புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்தப் படம் தெலுங்கில் வெளியான ‘அத்திரிண்டிக்கி தாரிடி’ படத்தின் ரீமேக். தெலுங்கில் பவன் கல்யாண் நடித்திருந்த கேரக்டரில் சிம்பு தமிழில் நடித்து வருகிறார். இதில் கேத்ரின் தெரசா, மேகா ஆகாஷ், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, ரோபோ ஷங்கர், மகத் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் தலைப்பை லைகா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் தளத்தில் தீபாவளி பரிசாக வெளியிட்டுள்ளது. அதில் இப்படத்திற்கு ‘ வந்தா ராஜாவாதான் வருவேன்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பே இப்படத்தின் தலைப்பின் முதல் எழுத்து ‘வி’ என்றே இருக்கும் என படக்குழு கூறியிருந்தது. அவர்கள் தெரிவித்ததை போலவே ‘வி’ என்ற முதல் எழுத்தில் படத்தின் தலைப்பு தற்போது வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தின் தலைப்பை படக்குழு ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் சிம்பு பேசிய வசனத்தில் இருந்து எடுத்து பயன்படுத்தி இருப்பதாக தெரிகிறது. அந்தப் படத்தில் சிம்பு பேசிய ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற வசனம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை எட்டி இருந்தது.
இந்தப் படத்திற்கு ஹிப் ஆப் தமிழா ஆதி இசையமைக்கிறார். இந்தப் படம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக படக்குழு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே அஜித்தின் ‘விஸ்வாசம்’ இதே பொங்கல் அன்றே வெளியாகும் என அறிவித்துள்ளனர். இந்த இரு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளதால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். சிம்புவும் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.