சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு அவர் அடுத்து நடிக்கவுள்ள படங்களின் அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கிறது. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் 2023ல் வந்த `பத்து தல'. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக சிம்பு படம் எதுவும் வெளியாகாத சூழலில் தான், அவரது அடுத்த படங்கள் பற்றிய அறிவிப்புகள் வந்திருக்கிறது. என்னென்ன படங்கள்? இந்த ஆண்டு சிம்புவின் கேம்-பிளான் என்ன? பார்க்கலாம்...
ஆயிரம் அதிசயம் அமைந்தது சிம்பு லைனப் என சொல்லும் படியான கரியர் அவருடையது. மாநாடு என முரட்டு கம்பேக் கொடுத்தவர், அடுத்து வெளியான வெந்து தணிந்தது காடு, பத்துதல என ஆவரேஜ் படங்களை கொடுத்தார். அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஹிஸ்டரிகல் படத்தில் நடிக்கிறார், எஸ் டி ஆரின் 48வது படமான இதில் அவர் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் இப்படத்தை தயாரிக்கும் என கடந்த ஆண்டு சிம்பு பிறந்தநாளுக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இப்படம் துவங்காமலே இருந்தது. இப்போது அவரது அடுத்த படங்களின் வரிசையில் சில மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன.
சிம்புவின் அடுத்த படமாக வர இருப்பது, கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியிருக்கும் `தக் லைஃப்' தான். இதில் சிம்பு லீட் ரோல் இல்லை என்றாலும், மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம் ஜூன் 5ம் தேதி வெளியாகிறது. இது சிம்புவின் 48வது படம்.
அடுத்தது `பார்க்கிங்' படத்தின் மூலம் கவனிக்கப்பட்ட ராம்குமார் இயக்கத்தில் நடிக்கிறார் சிம்பு. `STR 49' ஆக உருவாகும் இப்படத்தை, `இட்லிகடை', `பராசக்தி' படங்களை தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதற்கடுத்ததாக, சிம்புவின் 50வது படம், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகிறது. சென்ற ஆண்டு சிம்புவின் 48வது படமாக அறிவிக்கப்பட்ட இந்தப் படம், இப்போது சிம்புவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ATMAN CINE ARTSன் முதல் படமாக தயாராகிறது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு, யுவன் ஷங்கர் ராஜா இசை என வலுவான கூட்டணி இப்படத்திற்காக இணைந்திருக்கிறது.
இதில் STR 48-ஆன `தக் லைஃப்' ஜுனில் வெளியாகிறது. ராம்குமார் இயக்கத்தில் நடிக்கும் `STR 49' ஆகிய படங்கள் இந்த ஆண்டே வெளியாகும் என சொல்லப்படுகிறது. இரண்டு ஆண்டு காத்திருந்த சிம்பு ரசிகர்களுக்கு பேக் டூ பேக் வெரைட்டி விருந்து காத்திருக்கிறது.
அதே நேரம் ஸ்பெஷல் படமான STR 50, மிகப்பெரிய பொருட் செலவில் பிரமாண்டமாக உருவாக இருக்கிறது. ஏற்கனவே பெரிய இடைவெளி இருந்ததால் படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் மொத்தத்தையும் முடித்துவிட்டார் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி. படத்தின் செட் எப்படி இருக்க வேண்டும் என்பது வரை மினியேச்சரில் தயார் என சொல்கிறார்கள். ஷூட்டிங் மட்டுமே பாக்கி, எனவே பொறுமையாக ஆரம்பித்தாலும், படப்பிடிப்பு துவங்கியதும் விறுவிறுவென வேலைகள் நடக்கும். 2026ல் `STR 50' திரைக்கு வரும் என நம்பலாம்.
இதனை அடுத்து சிம்பு நடிப்பது, `ஓ மை கடவுளே', `டிராகன்' படங்களை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து படம். `STR 51'ஆக உருவாகும் இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் அறிவிப்பு முன்பே வெளியாகிவிட்டது. இன்று சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் அறிவித்திருக்கிறார்கள்.