சினிமா

‘இந்தியன்2’ என் வாழ்க்கையில் மேலும் ஒருபடி - காஜல் அகர்வால்

‘இந்தியன்2’ என் வாழ்க்கையில் மேலும் ஒருபடி - காஜல் அகர்வால்

webteam

‘இந்தியன்2’ படத்தில் ஒப்பந்தமாகி இருப்பது தன்னுடைய திரைவாழ்க்கையில் மேலும் ஒருபடி என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

கமல் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கிய படம் ‘இந்தியன்’,இது 1996 ஆம் ஆண்டு வெளியானது. ஊழலை ஒழிப்பது குறித்து இப்படத்தின் கதை அமைந்திருந்தது. இந்நிலையில் தனியார் நிகழ்ச்சியின் போது நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் மற்றும் தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூ ஆகியோர் ‘இந்தியன் 2’ படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.

பின்னர் இப்படத்தின் தயாரிப்பாளராக இருந்த தில் ராஜூ இப்படத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவிப்பு வெளியிட்டார். பின்னர், ‘2.0’ தயாரிப்பு நிறுவனமான ‘லைக்கா புரொடக்சன்ஸ்’ ‘இந்தியன்2’ படத்தை தயாரிப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி இம்மாத இறுதியில் இப்படத்துக்கான படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிப்பு வெளியானது.

‘இந்தியன்2’ படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர்,
‘இந்தியன்2’ படத்தில் ஒப்பந்தமாகி இருப்பது என்னுடைய திரைவாழ்க்கையில் மேலும் ஒருபடி. இந்தப் படத்தில் நடிக்க நான்
மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கிறேன். எனது கதாபாத்திரம் குறித்து ஆவலாக இருக்கிறேன். இந்தப்படம் நிறைய கற்றுக்கொள்ள உதவும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

தற்போது காஜல் அகர்வால் ஹிந்தி படமான‘குயின்’ படத்தின் தமிழ் ரீமெக்கான ‘பாரீஸ் பாரீஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ‘பாரீஸ் பாரீஸ்’ திரைப்படம் குறித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்ட அவர், நான் ‘குயின்’ தமிழ் ரீமேக்குக்கு ஒப்பந்தமான போது அதன் கதையை கேட்டேன்.

அது எல்லா மொழிக்குமான படம். ஒரு சாதாரண பெண்ணின் பல்வேறு நிலைகளை காட்சிப்படுத்தும் படம் அது. நிச்சயம் இந்தப்படம் தமிழக பெண்களை திரையில் எதிரொளிக்கும். அனைவருக்கும் பிடித்தமான படமாக இருக்கும். அனைத்து பெண்களுக்கும் ஒரு ஊக்கத்தை தரும் என்று நம்புகிறேன் என்றும் தெரிவித்தார்.