இஸிட்ரோ மீடியா சார்பில் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி ’என்ற படத்தை தயாரித்து வெளியிடுகிறார் நடிகை ஸ்ருதிஹாசன்.
நடிகை ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கு, இந்தி என பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையே, இஸிட்ரோ மீடியா சார்பில் படத் தயாரிப்பிலும் ஈடுபடுகிறார். இந்நிறுவனம் மூலம் ’லென்ஸ்’ படத்தை இயக்கிய ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனின் அடுத்த படமான ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’யை தயாரித்து வெளியிடுகிறார்.
படம் பற்றி ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் கூறும்போது, ‘நான்கு நண்பர்களின் கதை மூலம் இந்த சமூகம் எப்படி பழங்கால மரபுகளின் வீழ்ச்சி யையும், நவீனத்தின் எழுச்சியையும் எதிர்கொள்கிறது என்பதை சொல்கிறோம். உலகம் முழுவதுக்குமான கதை இது. இந்தப் படம் பற்றி சரிகா மேடத்திடம் ஐந்து நிமிடம்தான் பேசினேன். அவர்களே தயாரிக்க முன் வந்தனர்’ என்றார்.
ஸ்ருதிஹாசன் கூறும்போது, ‘ இந்த இயக்குனரின் முந்தைய படைப்பான லென்ஸை பார்த்து வியந்தோம். எளிய கதைகளை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்துவதில் அவரின் பார்வை ஆச்சரியமாக இருந்தது. இதையடுத்து இந்தப் படத்தின் கதையை கேட்டதும் தயாரிக்கலாம் என்று முடிவு செய்தோம்’ என்றார்.