சினிமா

‘எல்லா இடங்களிலும் பீதி நிலவுகிறது’ கொரோனா குறித்து ஸ்ருதி ஹாசன்

webteam

கூடுதலாகவும் கடினமாகவும் உழைக்க வேண்டிய நேரம் இது என்று கொரோனா குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடும் அச்சுருத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 145 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸால் 5,436 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இதுவரை ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 634 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 72 ஆயிரத்து 529 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். அ‌திகபட்சமா‌க கொரோனா வைரஸ் முதலில் பரவிய சீனாவில் 3 ஆயிரத்‌து 189 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இத்தாலியில் ஆயிரத்து 266 பேரும், ஈரானில் 514 பேரு‌ம் இறந்துவிட்டனர். இந்தியாவை பொறுத்தவரை தற்போது 85 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பினால் இதுவரை இந்தியாவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் குறித்து மக்களிடம் நிலவி வரும் அச்சம் தொடர்பாக நடிகையும் கமல்ஹாசனின் மகளுமான ஸ்ருதிஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் மக்கள் இந்த நோயை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து கூறியுள்ளார். அவரது பதிவில், “மக்கள் எல்லோரும் பயப்படுகிறார்கள், எல்லா இடங்களிலும் பீதி நிலவுகிறது. நம் உடல்நலத்திற்கு அச்சுறுத்தல் இருப்பது உண்மையானது” என்று கூறியுள்ள அவர், எல்லோரும் சுத்தமாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், இது குறித்து அவர், “அனைவரும் முயற்சி செய்யும் நேரம் இது. ஒட்டுமொத்தமாக மனிதகுலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது, அழகையும் தயவையும் வெளிப்படுத்த கூடுதலாகவும் கடினமாகவும் உழைக்க வேண்டிய நேரம் இது” என்று கூறியுள்ளார்.