மார்ச் 17 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடிகை ஸ்ரேயாவுக்கு திருமணம் நடக்க உள்ளதாக செய்தி பரவி வருகிறது.
தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா. ரஜினி, விஜய், ஜெயம் ரவி, விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து கொண்டிருந்த இவருக்கு திடீரென்று பாலிவுட் வாய்ப்பு கிடைத்தது. ரஜினியுடன் ‘வாஜி..வாஜி சிவாஜி’ என ரஜியுடன் ஆடிக் கொண்டிருந்தவர் அதன் பின் மும்பையில் செட்டில் ஆனார். தமிழுக்கு மீண்டும் அவரை இழுக்க பல முயற்சிகள் நடந்தன. ஆனால் அவர் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பின் இப்போதுதான் அரவிந்த் சாமியின் ‘நரகாசூரன்’ படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் அவருக்கும் ரஷ்ய விளையாட்டு வீரரும் தொழிலதிபருமான ஆண்ட்ரி கொசேவ்வை அவர் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஜோடி சில வருடங்களாகவே காதலித்து வந்தனர். இவர்கள் இருவரின் திருமணம் குறித்து கடந்த மாதமே செய்தி வலம் வந்தது. அதை அவரது தாயார் முற்றிலுமாக மறுத்திருந்தார். மார்ச் மாதம் அவர்களது உறவினர் வீட்டுத் திருமணம் ஒன்றில் தனது மகள் கலந்து கொள்ள இருப்பதாகக் கூறியிருந்தார்.
ஆனால் இப்போது மீண்டும் அவரது திருமணம் மார்ச் 17 ஆம் தேதி தொடங்கி 19 தேதி வரை உதய்பூரில் நடைபெற இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவரது நெருங்கிய உறவினர்கள் அதை உறுதி செய்துள்ளனர். ஆனால் ஸ்ரேயா இது குறித்து எதையும் கூறவில்லை. ஸ்ரேயாவுக்கு 35 வயதாகி விட்டது. இனியும் காலதாமதம் செய்ய வேண்டாம் என அவரை உறவினர்கள் கட்டாயப்படுத்தியதால் அவர் திருமணத்திற்கு சம்மதித்துள்ளார். “என் வாழ்க்கை மிக சுவாரஸ்யமான கதைகளால் நிரம்பியுள்ளது. நான் என் சொந்த வாழ்க்கை குறித்து கூறப்போகிறேன். என் சொந்த வாழ்க்கை விற்க நான் தயாராக இல்லை. நான் ஒரு நடிகை. இங்கே என் சினிமாவை பற்றி மட்டுமே பேச வந்துள்ளேன்” என்று அவர் சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.