சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' மற்றும் கார்த்தியின் 'தம்பி' ஆகிய இரண்டு படங்களும் திரைக்கு வந்த சில மணிநேரங்களில் ஆன்லைனில் சட்டவிரோதமாக வெளியாகி உள்ளன.
சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’, கார்த்தியின் ‘தம்பி’ ஆகிய இரண்டு படங்களும் இன்று திரையில் வெளியாகி உள்ளன. இவை இரண்டிற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பரவலாக உள்ளது. ஆனால் ஒரு அதிர்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால் இந்த இரண்டு படங்களின் பைரசி வெர்ஷன் ஆன்லைனில் சட்ட விரோதமாக வெளியாகி உள்ளது. அதனைக் கண்டு இந்த இரு படக்குழுவினரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
சிவாவின் ‘ஹீரோ', ஒரு சூப்பர் ஹீரோவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரில்லர் திரைப்படம். இதனை பி.எஸ் மித்ரான் இயக்கியுள்ளார். இப்படம் நாட்டிலுள்ள கல்வி முறையின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகிறது. கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரித்த இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், அபய் தியோல் மற்றும் அர்ஜுன் சர்ஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான 'தம்பி'யில் கார்த்தி, ஜோதிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். முதன்முறையாக கார்த்தியும் ஜோதிகாவும் இணைந்து நடித்துள்ளனர்.
வரவிருக்கும் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக இந்த இரண்டு படங்களுக்குமான ஆன்லைன் முன்பதிவு தற்போது நடைபெறுகிறது. விடுமுறை நாளில் இரண்டு படங்களும் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை ஈட்டி தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த சட்டவிரோதமான ஆன்லைன் கசிவு மூலம் அதன் லாபம் குறையும் என கூறப்படுகிறது. ஆகவே இதனை தடுக்க வேண்டும் என குரல் எழுப்பி வருகின்றனர்.
சட்டவிரோதமாக படங்கள் ஆன்லைனில் வெளியிடுவதை தடுக்க பல்வேறு முயற்சிகளை திரைத்துறையினர் எடுத்து வந்தாலும் அவர்களின் முயற்சிகளை முறியடிக்கும் வகையில் இந்த மாதிரி படங்கள் வெளிவந்து கொண்டுதான் உள்ளன. ஆகவே இதற்கு ஒரு முடிவே கிடையாதா என்றும் திரைத்துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர்.