நடிகை மாயா கிருஷ்ணன் தன்னை பாலியல் கொடுமை செய்ததாக நாடக நடிகை அனன்யா ராமபிரசாத் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக #MeeToo என்ற ஹேஷ்டேக் மூலம் இந்தியாவிலும் பிரபலங்கள் தங்கள் பாலியல் புகார்களை தெரிவித்து வருகின்றனர். கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி தெரிவித்து மீ டூ புகாருக்கு பிறகு, தமிழ்த் திரையுலகிலும் மீடூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அந்த வகையில் பல பிரபலங்களும் தங்கள் தரப்பு மீடூ புகார்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாடக கலைஞர் மற்றும் நடிகையான அனன்யா தனக்கு நேர்ந்ததாக ஒரு மீ டூ புகாரை தெரிவித்துள்ளார். இதில் விஷயம் என்ன வென்றால் அவர் குற்றம்சாட்டிய நபர் ஒரு ஆண் அல்ல. ஒரு பெண்.
‘தொடரி’,‘மகளிர் மட்டும்’,‘வேலைக்காரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் மாயா கிருஷ்ணன். தற்போது இவர் ரஜினிகாந்தின் ‘2.0’ படத்திலும் நடித்துள்ளார். இவர் மீதுதான் அனன்யா பாலியல் புகார் தெரிவித்துள்ளார். கடந்த 2016ஆம் தனக்கு 18 வயது இருக்கும்போது, மாயாவுடன் பழக்கம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்பின்னர் மாயா தனக்கு மிகவும் நெருக்கமான ஒரு நபராக மாறியதாகவும் அவர் கூறியுள்ளார். தன் கலைத்துறையில் அடுத்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டியதால், அவரிடம் தான் மரியாதையுடனும் நம்பிக்கையுடனும் பழகியதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவர் தன்னிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாகவும், படிப்படியாக தன் வாழ்க்கையை அவர் வசம் கொண்டு சென்றதாகவும் வருத்தமாக கூறியுள்ளார். மேலும் தனது பள்ளி நண்பர்கள் தொடர்பை தன்னிடம் இருந்து பறித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். என்னைப் பற்றி தன் நண்பர்களிடம் தவறாக கூறி தன்னை தனிமைப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தனது மனதை பலவீனப்படுத்தி, தன்னுடன் இரவில் தங்கும்போது தவறாக நடந்துகொண்டதாக குற்றம்சாட்டியுள்ளார். அவரது பாலியல் தொல்லைகளை அனுபவித்த நாட்கள் தன் வாழ்வில் கொடுமையான நாட்கள் என்றும், அந்தத் துயரமான நினைவுகளிலிருந்து தான் இன்னும் மீளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுவரை ஆண்கள் மீது மீடூ புகார்கள் எழும்பி வந்த நிலையில், ஒரு பெண் மீது மற்றொரு பெண் மீடூ புகார் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகார்களை அனன்யா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மிக விரிவாக எழுதியுள்ளார். அதனையொட்டியே இந்த விவகாரம் வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது.