பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்திய திரைப்பட நடிகை, தயாரிப்பாளர் மற்றும் மாடலமாக வலம் வருபவர் ஷில்பா ஷெட்டி. இவர் பெரும்பாலும் ஹிந்தி மொழி திரைப்படங்களிலேயே கவனம் செலுத்துபவர். இருப்பினும் ஹிந்தி மொழியை தவிர தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் அவ்வப்போது நடித்துள்ளார். திரைப்படங்கள் மட்டுமில்லாமல், சில தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்தை பொருத்தவரை ‘ரோமியோ’, ‘குஷி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
நடிகை ஷில்பா ஷெட்டி கடந்த 2009-ஆம் ஆண்டு, தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 2012-ஆம் ஆண்டு ‘வியான்’ என்ற ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்த்ராவுக்கு கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதுகுறித்து ராஜ் குந்த்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “எங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினரான சமீஷா ஷெட்டி குந்த்ராவை அறிவிப்பதில் நான் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறேன் என்பதை வெளிப்படுத்த இயலவில்லை. பெண் குழந்தை பிறந்துள்ளார். நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
தனது பெண் குழந்தையின் முதல் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஷில்பா ஷெட்டி “எங்கள் பிரார்த்தனைகளுக்கு ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது. மனதார நன்றி தெரிவிப்பதுடன், எங்கள் குட்டி தேவதை சமீஷா ஷெட்டி குந்த்ராவின் வருகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் சமீஷா என்ற பெயருக்கு விளக்கமும் அளித்துள்ளார். அதாவது, 'sa' என்றால் ‘வேண்டும்’ எனவும் ‘Misha’ என்றால் ரஷ்ய மொழியில் “கடவுளைப் போன்ற ஒருவர்” என்பதை குறிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.