ரஜினி அரசியலுக்கு வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று நடிகரும், பாஜக எம்பியுமான சத்ருகன் சின்ஹா அறிவுரை கூறியிருக்கிறார்.
பாஜக எம்பியாக இருந்தாலும், அந்த கட்சிக்கு எதிராகவே பல்வேறு கருத்துகளைக் கூறி பரபரப்பை கிளப்பும் வழக்கம் கொண்ட சத்ருகன் சின்ஹா, ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தின் டைட்டானிக் ஹீரோ மற்றும் இந்தியாவின் மகன் என்று ரஜினியைப் புகழ்ந்துள்ள அவர், எழுச்சி பெற்று வாருங்கள், இதுவே சரியான தருணம் என்று பதிவிட்டுள்ளார். மக்கள் உங்கள் பக்கம் இருப்பதால், நீங்கள் யாருடனும் சென்று இணைய வேண்டாம், மாறாக மற்றவர்கள் உங்களுடன் இணையும்படியாக நடப்பதே சிறந்ததாக அமையும் என்றும் ரஜினிக்கு அவர் அறிவுரை கூறியிருக்கிறார். அரசியல் பிரவேசம் குறித்து குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அறிஞர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் முடிவெடுங்கள். விரைவில் ரஜினி நல்ல முடிவெடுப்பார் என்று நம்புவதாகவும் சத்ருகன் சின்ஹா குறிப்பிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்தை பாஜகவில் இணைக்க பல்வேறு முயற்சிகளை அக்கட்சி எடுத்து வருவதாகக் கூறப்படும் நிலையில், சத்ருகன் சின்ஹா இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.