சினிமா

ரஜினி, சிட்டி காம்பினேஷனில் ‘3.0’வுக்கு திட்டமிடும் ஷங்கர்?

ரஜினி, சிட்டி காம்பினேஷனில் ‘3.0’வுக்கு திட்டமிடும் ஷங்கர்?

webteam

அடுத்து ‘3.0’ பாகத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்ததாக தகவல் கசிந்துள்ளது. 

ஷங்கர் இயக்கத்தில் ‘2.0’ படம் நாளை மறுநாள் 29ம் தேதி உலகம் முழவதும் வெளியாக உள்ளது. இதில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமிஜாக்சன் ஆகிய பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் படத்தின் வருகைக்காக ரஜினியின் ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.  

இந்திய சினிமா உலகமே ‘2.0’வின் வருகையை எதிர்பார்த்தே உள்ளது எனலாம். ஏனெனில் இந்தியா போன்ற ஒரு நாட்டில் இவ்வளவு பொருட்செலவுடன் தயாராகும் படத்தின் வசூல் என்பது வெளியாகும் குறிப்பிட்ட படத்துடன் முடிந்து போகப்போவதில்லை. அதன் வியாபாரம் இந்திய சினிமா மார்கெட்டை பற்றிய ஒரு புரிதலை உருவாக்க உதவக்கூடும். இந்தப் படம் இந்திய மதிப்பில் 500 கோடி பட்ஜெட் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 6600ல் இருந்து 6800 வரையான திரைகளில் இப்படம் திரையிடப்பட உள்ளது. படத்தின் டிக்கெட் புக்கிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதனிடையே படத்தில் செல்போன்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும், எனவே படத்தை மறு தணிக்கை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்திய செல்போன் ஆப்ரேட்டர்கள் சங்கத்தினர், மத்திய தணிக்கைத் துறை, தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை அமைச்சகத்திற்கு இன்று அளித்த மனுவில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இயக்குநர் ஷங்கர், இப்படத்தின் அடுத்த பாகத்தை எடுக்க திட்டமிட்டு வருவதாக பெயர் குறிப்பிட விரும்பாத நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினிகாந்த் மற்றும் சிட்டி இருவரும் இல்லாமல் இதன் அடுத்த பாகத்தை எடுப்பதைப்பற்றி தன்னால் சிந்திக்க முடியவில்லை என்றும் அவர் கூறியதாக தெரிகிறது. ஏனெனில் சிட்டி பாத்திரத்தைதான் அனைவரும் ரசித்ததாக அவர் பேசியதாகவும் தெரிகிறது. நல்ல கதைக்கரு கிடைத்தால் அதன் அடுத்த பாகத்தை ‘3.0’ ஆக எடுக்க விரும்புவதாகவும் அவர் பேசியதாக அந்த நடிகர் பகிர்ந்து கொண்டுள்ளார். 

ஆக, ஷங்கர் ‘2.0’ வெற்றியை வைத்து விரைவில் ‘3.0’ படத்திற்கு அடித்தளம் அமைப்பார் என எதிர்ப்பார்க்கலாம் என்றே தெரிய வந்துள்ளது.