சினிமா

‘பிகில்’ விஜய்யுடன் ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் ஷாரூக் கான்?  

‘பிகில்’ விஜய்யுடன் ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் ஷாரூக் கான்?  

webteam

‘தெறி’,‘மெர்சல்’ ஆகிய இருப்படங்களை அடுத்து விஜய்யை வைத்து இயக்குநர் அட்லீ மீண்டும் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படம் குறித்த செய்திகள் ‘தளபதி63’ என்றே சமூக வலைத்தளங்களில் ஆரம்பத்தில் வெளியாகி வந்தன. ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. இந்த ஆண்டு தீபாவக்கு இது வெளியாகும் என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

இதில் நடிகர் விஜய் கால்பந்தாட்ட வீரராக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆகவே அதற்கான காட்சிகளை படமாக்க பிரம்மாண்டமான கால்பந்தாட்ட அரங்கம் ஒன்றை ஆறு கோடி ரூபாய் செலவில் படக்குழு அமைத்திருந்தது. விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். 

மேலும் காமெடி நடிகர் விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, கதிர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூன் மாதம் விஜய்யின் பிறந்த நாளையொட்டி  வெளியானது. படத்திற்கு ‘பிகில்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதும் அப்போது தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் நடிக்க இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவர் ‘பிகில்’ படத்தில் ஒரு நடனக் காட்சியில் மட்டும் தோன்றி விஜய்யுடன் ஆட இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

ஆனால் இந்தத் தகவல் உண்மையில்லை என்று இப்படத்தின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் பாலிவுட் நடிகர் கரண் ஜோஹர் இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கான உரிமையை வாங்கி இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கசிந்து வருகின்றன. விஜய்யின் ‘பிகில்’ வெளியாவதற்கு முன்பாகவே 220 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி விட்டதாகவும் பேசப்படுகிறது. ஆனால் இந்தத் தகவல்கள் யாவும் அதிகாரப்பூர்வமானதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.