அட்லீ இயக்கும் விஜய் படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய இருப்படங்களை அடுத்து விஜயை வைத்து மீண்டும் இயக்குநர் அட்லீ ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இதற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. ஆகவே இப்படம் குறித்த செய்திகள் ‘தளபதி63’ என்றே சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன.
‘சர்கார்’ வெற்றிக்குப் பிறகு விஜய் நடிக்கும் படம் என்பதால் இப்படம் குறித்து அவரது ரசிகர்களிடம் பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த ஆண்டு இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வேலைகளில் மிக மும்முரமாக படக்குழு இயங்கி வருகிறது. இதில் நடிகர் விஜய் கால்பந்தாட்ட வீரராக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆகவே அதற்கான காட்சிகளை படமாக்க பிரம்மாண்டமான கால்பந்தாட்ட அரங்கம் ஒன்றை படக்குழு அமைத்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்க இருப்பதாக திடீரென்று ஒரு தகவல் பரவி வருகிறது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண ஷாருக்கான் நேரில் வந்திருந்தார். அப்போது அவர் அட்லீயின் அருகில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
மேலும் ‘மெர்சல்’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவும் அதில் ஷாருக்கானை நடிக்க வேண்டியும் அட்லீ கேட்டதாக கூறப்பட்டது. அந்தச் செய்திக்கான வேகம் குறைவதற்கு முன்பே ‘தளபதி63’ல் விஜய்க்கு வில்லனாக ஷாருக்கானை நடிக்க வைக்க அட்லீ திட்டமிட்டு வருவதாக ஒரு வதந்தி பரவி வருகிறது. ஆனால் இந்தத் தகவலை படக்குழுவினர் இன்னும் உறுதி செய்யவில்லை.
‘தளபதி63’ல் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் காமெடி நடிகர் விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, கதிர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.