சினிமா

‘பாகுபலி 2’, ‘கே.ஜி.எஃப். 2’ சாதனையை முறியடித்த ‘பதான்’ - 4 நாட்களில் ரூ. 400 கோடி வசூல்

சங்கீதா

ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பால் திரையரங்குகளில் வெளியான நான்கு நாட்களில் ரூ.400 கோடி வசூலித்துள்ளது. 

ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரஹாம், சல்மான்கான் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 25-ம் தேதி வெளியான திரைப்படம் ‘பதான்’. சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்த இந்தப் படத்தை, ஆதித்யா சோப்ராவின் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்திருந்தது. இந்நிலையில், இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான 4 நாட்களில் ரூ. 415 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ. 218. 75 கோடி வசூலை ஈட்டி, 200 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. இந்தியில் அதிவேகத்தில் 200 கோடி ரூபாய் வசூலித்த படம் என்ற பெருமையையும் ‘பதான்’ படம் பெற்றுள்ளது.

இந்தியில், ‘கே.ஜி.எஃப். 2’ வின் முதல்நாள் வசூல் சாதனையான ரூ. 53.95 கோடியை முந்தி, ரூ. 55 கோடி வசூலித்திருந்தது ‘பதான்’. தற்போது எஸ்.எஸ். ராஜமௌலியின் ‘பாகுபலி 2’ படம் 6 நாட்களிலும், யஷ்ஷின் ‘கே.ஜி.எஃப். 2’ படம் 5 நாட்களிலும், பாலிவுட்டில் படைத்த சாதனையை ‘பதான்’ படம் நான்கே நாட்களில் முறியடித்துள்ளது. அதன்படி, 200 கோடி ரூபாய் கடந்து சாதனை படைத்துள்ளது. மேலும் ‘பாகுபலி 2’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி 4 நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலை கடக்காத நிலையில், ‘பதான்’ படம் அதனையும் கடந்துள்ளது.

இன்று விடுமுறை தினம் என்பதால், படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதே வரவேற்புடன் இன்னும் ஒரே வாரம் சென்றால், விரைவில் ரூ.1000 கோடியை ‘பதான்’ படம் வசூலிக்கும் என்று திரைத்துறை வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

‘பதான்’ படத்திற்கு அப்பாஸ் டயர்வாலா மற்றும் ஸ்ரீதர் ராகவன் திரைக்கதை அமைத்திருந்தனர். சஞ்சித் பால்ஹரா, அங்கீத் பால்ஹரா பின்னணி இசை அமைத்திருந்தனர். விஷால் -சேகர் பாடல்கள் செய்திருந்தனர். ஆரிஃப் ஷேக் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருந்தார்.