சினிமா

பிரமாண்டத்தில் மிரட்டும் பிரபாஸின் ’சாஹோ’ டீசர்!

பிரமாண்டத்தில் மிரட்டும் பிரபாஸின் ’சாஹோ’ டீசர்!

webteam

பிரபல நடிகர் பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று வெளியான அவரது ’சாஹோ’ படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ படங்களுக்காக 5 வருடங்களை செலவழித்த பிரபாஸ், இப்போது ’சாஹோ’வில் நடித்து வருகிறார். பிரமாண்ட ஆக்‌ஷன் படமான இதில் அவர் ஜோடியாக ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். அருண் விஜய், நீல் நிதின் முகேஷ் வில்லன்களாக நடிக்கின்றனர். மற்றும் மந்திரா பேடி, ஜாக்கி ஷெராப் உட்பட பலர் நடிக்கின்றனர். மதி ஒளிப்பதிவு செய்கிறார். ஷங்கர் -எஹசான் -லாய் இசை அமைக்கின்றனர்.

சுஜித் இயக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் மெகா பட்ஜெட்டில் உருவாகிறது. இந்தப் படத்துக்காக, ’டை ஹார்ட்’, ’டிரான்ஸ்பார்மர்ஸ்’ உட்பட பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ள கென்னி பேட்ஸ் சண்டை காட்சிகளை அமைக்கிறார். படத்தில் இடம்பெறும் முக்கிய சண்டைக்காட்சியை அபுதாபியில் கடந்த 60 நாட்களாக படமாக்கி வந்தனர். இதில் அருண் விஜய்யும் பங்குபெற்றார். இந்திய சினிமாவில் இதுவரை இடம்பெறாத வகையில் இந்த சண்டைக் காட்சி இருக்கும் என்று படக்குழு கூறியது.

இந்நிலையில் பிரபாஸின் 39 பிறந்த நாளான இன்று ’சாஹோ’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. ’ஷேட்ஸ் ஆஃப் சாஹோ’ என்று பெயரிடப் பட்டுள்ள இந்த டீசரில், படப்பிடிப்பு காட்சிகளின் தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன. அபுதாபியில் நடந்த படப்பிடிப்பின் பிரமிக்க வைக்கும் ஆக்‌ஷன் காட்சிகள், கார்கள் அந்தரத்தில் பறந்து உருண்டு விழும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. ஸ்டைலிஷாக தெரியும் ஒவ்வொரு காட்சியும் ஆச்சரியத்தை வரவழைக்கிறது.

அபுதாபியில் எடுக்கப்பட்டுள்ள ஆக்‌ஷன் காட்சிகள் மிரட்டுவதாக அமைந்துள்ளன. டீசரின் இறுதியில் வரும் பிரபாஸின் என்ட்ரி ரசிக்கும்படி உள்ளது. சமூகவலைத்தளங்களில் இந்த டீசர், இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது. இந்தப் படம் ஆக்‌ஷன் ரசிகர்ளுக்கு விருந்தாக அமையும் என பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர்.