சினிமா

பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் கவலைக்கிடம்

PT WEB

பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சின்னத்திரை சீரியல்கள் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகர் வேணு அரவிந்த். 1996ம் ஆண்டு ஒளிபரப்பான காஸ்ட்லி மாப்பிள்ளை, 1997ம் ஆண்டு ஒளிபரப்பான கிரீன் சிக்னல் சீரியல்கள் மூலம் பரவலாக அறியப்பட்டார். அதேபோல 1997,99 காலக்கட்டத்தில் ஒளிபரப்பான கே.பாலசந்தரின் `காசளவு தேசம்’, `காதல் பகடை’, உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

மேலும் வாணி ராணி, செல்வி, சந்திரகுமாரி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து புகழ்பெற்றவர். தவிர, முத்து எங்கள் சொத்து (1983), அந்த ஒரு நிமிடம் (1985), இனியவள் (1998), அலைபாயுதே (2000), என்னவளே (2001), நரசிம்மா (2001) வல்லவன் (2006) உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாமல் `சபாஷ் சரியான போட்டி’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அறியப்பட்டார். இது தவிர, கலைமாமணி விருது பெற்ற முதல் சின்னத்திரை நடிகர் என்ற பெருமையும் வேணு அரவிந்துக்கு உண்டு.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, கொரோனாவிலிருந்து மீண்டு வந்த வேணு அரவிந்துக்கு மூளையில் கட்டியிருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை மூலம் மூளையிலிருந்த கட்டி அகற்றப்பட்டது. அதையடுத்து, வேணு அரவிந்த் கோமா நிலைக்கு சென்றுள்ளதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வேணு அரவிந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என்று அவரது ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை நடிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.